>> Saturday, June 27, 2009
உலகத் தமிழர் ஆதரவுடன் அரசியல் வழிகளில் இனி நாம் போராட்டத்தை முன்னெடுப்போம்: செ.பத்மநாதன்
தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காக எமது இயக்கம் ஒரு புதிய பாதையில் இனிப் போராடும். அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் எமது அமைப்பில் நாம் மாற்றங்கள் செய்து வருகின்றோம். அதனடிப்படையில் - புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
நேற்று முன்நாள் வியாழக்கிழமை 'இந்தியா ருடே' குழுமத்தின் 'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:
பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?
எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.
இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?
ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.
கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.
பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?
எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.
'ஹெட்லைன்ஸ் ருடே'க்கு இன்று எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் கடைசிப் போரின் இறுதிக் கணங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று சொல்லியிருந்தார். ஏனைய உலகத் தலைவர்களுடனும் நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்களா?
ஆம். நான் சில உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இராஜதந்திரக் காரணங்களுக்காக அத்தகைய தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தத் தருணத்தில் எம்மால் வெளியிட முடியாதுள்ளது.
இந்த முயற்சிகள் ஏன் பயன் தராமல் போயின?
போரை நிறுத்த அர்த்தமான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளது. ஆயுதங்களை கீழே வைக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது தலைமை இருந்தது.
ஆயுதங்களை கீழே வைப்பதற்குப் பதிலாக நாம் ஒரு போர் நிறுத்தத்தையும் அரசியல் தீர்வையும் தேடினோம். தூரதிர்ஷ்டவசமாக எமது கோரிக்கை சிறிலங்கா அரசுக்கு ஏற்க முடியாத காரணத்தால் அனைத்துலக சமூகத்துக்கு அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கவில்லை. எனவே போரை நிறுத்த கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கடுமையான மிருகத்தனமான தாக்குதல்களின் காரணமாகவும் மருத்துவ வசதிகளும் இல்லாத காரணத்தால் பொதுமக்களினதும் எஞ்சிய வீரர்களின் உயிரைக் காக்கவும் எமது தலைமை துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியது.
எமது தலைமை துப்பாக்கிகளை நிறுத்தாது விட்டால் அதனை ஒரு சாட்டாக வைத்து சிறிலங்கா அரசு எமது மக்களின் அழிப்பை நியாயப்படுத்திவிடும் எனக் கவலை கொண்டிருந்தது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் செய்தி எனக்கு 15 ஆம் நாள் மாலை தெரியப்படுத்தப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த 48 மணி நேரமும் நாம் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு உடனடிப் போர் நிறுத்தத்தை நடைமுறையாக்க முயற்சித்து அதில் எமக்குச் சாதகமான சில பதில்களும் கிடைத்திருந்தன.
மீதமான நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களாக இருந்த போதும் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறிலங்கா அரசின் பதில் மறுப்பாகவே இருந்தது. சிறிலங்கா அரசும் அதன் படையினரும் இறுதித் தாக்குதலிலும் தமது மிருகத்தனமான அழிப்பிலும் பிடிவாதமாக இருந்தனர்.
இந்தியாவில் உள்ள வைகோ, நெடுமாறன் உட்பட பல தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிவித்தலை விடுத்தமைக்காக உங்களைக் கண்டித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிலரும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தி மிகவும் கெட்டதும் பெரும் துன்பம் நிறைந்ததும் ஆகும். நிச்சயமாக இச்செய்தியை ஏற்கவும் உண்மை என எடுக்கவும் எனக்குப் பல மணி நேரங்கள் பிடித்தது. சில உறுப்பினரும் பெரும் பகுதியான தமிழ் மக்களும் நான் வெளிக்கொணர்ந்த செய்தியை நம்ப முடியாதுள்ளனர். நான் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன் அவர்களுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் காரணமாக உள்ளன. ஓரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கமாக நாம் எமது மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து விட முடியாது. அரசியல் ரீதியாகவும் எம் மக்களிடம் இருந்து உண்மைகளை மறைப்பது தவறானதாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்முறை வழியை கைவிட்டமை அமைப்புக்குள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளதா? இது நிரந்தரமானதா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் பின்னால் ஆயுதத்தை எடுக்கும் உரிமையைத் தன்வசம் கொண்டுள்ளதா?
எமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தும் முடிவு எமது தலைவரால் அவரது மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். நாம் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுகிறோம். இந்நிலையானது அமைப்புக்குள்ளே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.
எந்த ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரம், வடக்கு - கிழக்கு தமிழரின் வரலாற்றுத் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிப்பதாக அமைதல் வேண்டும்.
தமிழ் மக்களின் இந்த அரசியல் வேட்கைகளை அடையும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தோற்றுவதற்கு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரசியல் முறையான எதிர்ப்புகளையும் ஜனநாயகப் போராட்ட உரிமைகள் என்பனவற்றை அடக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தமையும், மூலகாரணமாக இருப்பதை இலகுவாக அவதானிக்க முடியும்.
இந்நிலை எமக்கும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட அநீதிகளின் வரலாற்றுப் பிரதிபலனாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அரசியல் வழியைத் தெரிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிய கேள்வி வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமையாக விட்டுவிட விரும்புகிறேன்.
அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் இப்போதும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் ஈழம் பெறுவதற்கான ஓரே வழி என நம்பும் மக்களைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்ட வழியில் எமது தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்தார். அக்காலத்தில் நிலவிய நிலைமைகளுக்குள் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்று விட்டார். இலட்சியத்துக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தவர். சுயநலங்களை அச்சாகக் கொண்டு சுழலும் இந்த உலக இயக்கத்துக்கு எமது ஆயுதப் போராட்டம் அனுதாபத்தைப் பெற முடியாது போய்விட்டது.
மாறாக சிறிலங்கா அரசு இன்றைய உலக நிலைப்பாட்டினையும் பூகோள அரசியல் கட்டமைப்புகளையும் தனது பக்கம் அணிதிரட்டி விட்டதை நாம் பார்த்துள்ளோம். நாம் எமது கொள்கைகளிலும் கோரிக்கைகளிலும் உறுதியாக நின்று அடுத்தகட்டப் போராட்டத்தை அரசியல் வழியில் தொடருவதே எம்முன் இருக்கும் சிறந்த தெரிவாக உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்குள் பிளவு என்றும் அதற்குள் ஒரு பலப்போர் நடக்கிறது என்றும் கூறப்படும் செய்தி அறிக்கைகள் பற்றி உங்கள் பதில் என்ன?
நான் அதனை மறுக்கிறேன். தலைவரின் மரணச் செய்தி அறிவித்தலால் எமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த விடயத்தில் நாம் ஒரு ஒற்றுமையைக் காண்பதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துவிட உழைத்து வருகிறோம்.
இனிவரும் காலத்தில் அமைப்பில் உங்களது பங்கு என்னவாக இருக்கும்?
தமிழீழ அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராக நான் எமது அரசியல் இலட்சியங்களை வென்றெடுக்கத் தேவையான அனைத்துலக உறவுகள் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவேன். நாம் அமைப்பில் மறுசீரமைப்புப் பணிகள் பற்றித் திட்டம் இட்டு வருகிறோம். இது முடிவுற்றதும் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அறிவிப்போம்.
எதிர்வரும் காலத்தில் புதிய வன்முறைகள் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தகைய பங்கை வகிக்கும்?
தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காகப் போராடும். நாம் ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து விட்டபடியால், நாம் எமது அமைப்பை அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் மாற்றம் செய்து வருகிறோம். அதன் எமது ஒரு செயற்பாடாக புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டிலும் உலகின் வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் உறவுகளினதும் ஆதரவுடன் எமது அமைப்பின் மீது உள்ள அனைத்துலக தடையை நீக்குவதற்காக உழைக்க வேண்டி உள்ளது.
அனைத்துலக சமூகம் முக்கியமாக இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது புதிய வழியை வரவேற்று அதற்கு வெகுமதியாக எமது அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கி எமது அரசியல் செயற்பாட்டுக்கான வாசற் கதவுகளைத் திறந்து விடுவர் என நாம் நம்புகிறோம்.
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றி எமக்குக் கூற முடியுமா? ஏனைய வெளியக அரசுகள் பெருமளவு பயனளிக்காத நிலையில் இது எப்படி அவற்றில் இருந்தும் வேறுபடுகிறது?
எமது சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசுக்கும் வெளியக அரசுக்கும் இடையில் சில கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் உருத்திரகுமாரன் இக்கேள்விக்கான மேலதிக பதிலை வழங்கக்கூடிய சரியான நபர் என நான் கருதுகிறேன்.
தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நேரடியாகப் பங்குபற்றுவது பற்றிச் சிந்திக்குமா? நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை தேடியிருக்கிறீர்கள். இந்த உறவு எப்படிச் செயற்படும்?
தேர்தலில் கலந்துகொள்வதில் எந்த நியாயமோ தேவையோ இருப்பது எமக்குத் தெரியவில்லை. அரசியல் வழியில் போரிடுவது என்பது கட்டாயமாகத் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல்களில் கலந்துகொள்ளாது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நாம் தேடவில்லை. ஆனால் நாம் புலத்திலும் தாயகத்திலும் அரசியல் நடவடிக்களின் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி உணருகிறோம். எப்படி ஒரு பொதுவான புரிந்துணர்வு உருவாகிச் செயற்படும் என்பது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.
அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?
சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து இருக்கலாம். ஆனால், அரசியலில் அல்ல. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான காரணிகள் கவனத்தில் எடுக்கப்படாமலே உள்ளன. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இலங்கை மக்களாட்சி பலமான சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சியாக மாறிவிட்டுள்ளது.
தமிழ் - சிங்கள மக்களை அடக்கும் சாதனங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் அரசு நீதி பரிபாலனம் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்றானது. அந்தத் தீவில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காது உள்ளதோடு அங்கே எதிர்வரும் காலத்தில் இன இணக்கப்பாட்டுக்கு எதிர்வரும் காலத்தில் பாரிய பின் விளைவுகளுக்கு வழிசெய்து விடும்.
சிங்கள மேலாதிக்க செயற்பாட்டில் நாட்டை ஆண்டு வரும் நிலையில் அந்தத் தீவில் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை. ஆனால், தேசப்பற்றாளரும் தேசத் துரோகிகளும் மட்டுமே உள்ளனர் என்பது அபத்தமாக இருக்கிறது. இலங்கை தனது தேசியக் கட்டுமானத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்து உள்ளதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொள்ள வேண்டும்.
இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தம்மை இலங்கையர் என அடையாளப்படுத்த விரும்பாது ஈழத் தமிழர்களாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். சிறிலங்கா அரசை அந்நிய அரசாகவே தமிழர்கள் கருதுகின்றனர்.
இத்தகைய பின்னணியில் தமிழர்களின் அரசியல் வேட்கைகளான தமிழ்த் தேசியம், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து ஒரு உண்மையான இணக்கப்பாடு காண்பதே எஞ்சியிருக்கும் தனி ஒரு தெரிவாக உள்ளது.
இப்போது மகிந்த ராஜபக்ச மிகப்பலமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை ஏற்க முன்வரின் சிங்கள மக்களின் எதிர்ப்பு குறைவாக எதிர்நோக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தம்மை எல்லா இன மக்களையும் சமமாக கருதும் ஒரு உண்மையான தலைவராகக் கருதினால் அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அங்கீகரித்து தம்மை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.
ஈழப் போர் - 4 என இன்று அழைக்கப்படும் போரில் இந்தியாவின் வகிபாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியாவால் அதிக அளவு செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?
அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.
இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம். இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் விடுத்த வேண்டுதலை ஏற்று இந்தியா போரை நிறுத்தத் தீர்மானித்திருந்தால் பொதுமக்களைப் பாரியளவில் காப்பாற்றியிருக்க முடியும்.
நீங்கள் இந்தியாவுடன் நேரடித் தொடர்பை மேற்கொள்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு ஏதும் வகிபாகம் இருக்கிறதா?
ஆம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ள இருக்கிறேன். தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை ஆதரிக்கவும் கோருவேன். நாடு கடந்த அரசு அமைப்பு கருத்தியல் நிலையில் உள்ளதால் ஏனைய அரசுகளின் ஆதரவைக் கேட்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்காது. தேசம் கடந்த அளவில் இது ஒரு புலம்பெயர் தமிழ் மக்கள் மயமான செயற்பாடாகும்.
நிச்சயமாக நட்பு அரசுகளின் ஆதரவு நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. தற்காலிக நாடு கடந்த அரசமைப்புக் குழு எல்லா நாடுகளுடனும் முக்கியமாக இந்தியாவுடனும் நாடு கடந்த அரசுக்கான ஆதரவைத் தேடும்.
இலங்கையில் இன்னமும் சில விடுதலைப் புலிகப் போராளிகள் செயற்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் காடுகளில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேணல் ராம் பிரபல தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இக்குழுவைப் பற்றிய தகவல் ஏதும் உங்களிடம் இருக்கிறதா? இக்குழுக்களிடம் இனிமேல் உங்கள் தொடர்பு என்னவாக இருக்கும்?
எமக்கு அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தி எமது தலைமையிலான புதிய வழிக்குத் திரும்பி எனது வழிகாட்டலில் உள்ளனர். எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதுவித வழிமுறையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை எனக்கு இருக்கிறது. இது விடயத்தில் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.
உங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு அனைத்துலக பிரச்சாரம் செய்து உங்களைக் கைது செய்யக் கோருகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன?
செய்தித் தாள்களில் இச்செய்தியைப் படித்துள்ளேன். தமிழ்த் தேசியம் தனது சட்ட ரீதியான உரிமைகளை வென்றெடுக்கும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நானும் பங்காளியாக உள்ளேன். அனைத்துலக சட்டங்களின்படி இப்போராட்டம் நியாயபூர்வமானது. இராணுவத் தோல்வி போராட்டத்தின் நியாயப்பாட்டை அழித்துவிட முடியாது. நான் எந்தக் குற்றமோ மனிதத்துக்கு கெடுதல் செய்யவோ இல்லை.
மேலும் நான் இப்போது எமது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்து வருகிறேன். இம் மாற்றத்துக்கான முடிவானது எமது தமிழர்களின் தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்தத் தீவில் உள்ள சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.
அந்தத் தீவினதும் பிராந்தினதும் உறுதிப்பாட்டிற்கும் அமைதிக்கும் முக்கியமானது. இந்த விடயத்தில் பாத்திரம் வகிப்போர் இந்த விடயத்தை யதார்த்த நிலையில் அணுகுவார்கள் என நான் நம்புகிறேன். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்காக நான் எவ்வித ஆபத்தையும் உயிரையும் கூடத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.
பொட்டு அம்மானின் உண்மை நிலை என்ன, சிறிலங்கா அரசு சொல்கிறது அவர் இறந்து விட்டார் எனவும் ஆனால் அதற்கான சான்றுகளைத் தர முடியாது உள்ளனர்?
எமக்கு கிடைத்த தகவல்களின் படி மே 17 ஆம் நாளில் 2009 இல் இடம்பெற்ற சிறிலங்கா படைகளுக்கு எதிரான போரில் அவரும் மாவீரர் ஆனார் என்றே தெரிகிறது.
நன்றி http://thamilislam.blogspot.com/
No comments:
Post a Comment