Monday, August 26, 2013

பாரம்பரிய உரங்களை பயன்படுத்தினால் பயிர்கள் கருகி போவதில்லை: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேட்டி

நாகர்கோவில்,ஏப் 19-


 
நாகர்கோவிலில் இன்று ஒரு தனியார் நிறுவனம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. இதில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
இப்போது நாம் உண்ணும் உணவில் நச்சு கலந்து உள்ளது. அதைத்தான் நாம் சாப்பிடுகிறோம். ரசாயண உரங்களால் பயிர்களில் நச்சு கலக்கிறது. வேகமாக பலன் தர வேண்டும் என்பதற்காக எதை எதையோ செய்கிறோம். விளைவு அனைத்திலும் நச்சு கலப்பு ஏற்படுகிறது.
 
இதனால் பலவித உயிர் கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறோம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என ஒவ்வொரு விதமான நோய்கள் மக்களுக்கு ஏற்படுகிறது.
 
கர்நாடகாவில் கடந்த முறை 10 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பயிரிடப்பட்டு இருந்தது. அங்கு இயற்கை சீற்றத்தால் பயிர்கள் கருகிய போது 100 விவசாயிகளின் பயிர்கள் மட்டும் கருகவில்லை. காரணம் அவர்கள் இயற்கை உரங்களை பயன்படுத்தி இருந்தனர்.
 
இப்படி இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிட்டால் பயிர்கள் கருகி போக வாய்ப்பு இல்லை.
 
இவ்வாறு அவர் கூறினார்.

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கருத்துக்கள்.



"மரங்கள் மொத்தம் இரண்டு வேலைகளைச் செய்கின்றன.

ஒன்று: நமக்கு உணவளிக்கிறது. நம் கால் நடைகளுக்கு உணவளிக்கிறது. இரண்டு: நம்முடைய கரிக் காற்றை உள்வாங்கிக் கொண்டு சுத்தமான காற்றாக மாற்றி திரும்ப நமக்கே அளிக்கிறது.

இன்று நாம் என்ன செய்கிறோம்? சாலையோரங்களில் இருக்கின்ற மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்து விட்டு ரோட்டை அகலப்படுத்துகிறோம். எதற்கு? ரோட்டை அகலமாக்குகிறோம். வண்டி வேகமாகப் போவதற்காக. அப்போது வாகனத்திலிருந்து நிறைய புகை வெளியேறப் போகிறது. அந்தப் புகையை உறிஞ்சுவதற்கு வேண்டிய மரங்கள் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது"


"படிப்பறிவு என்பது வேறு. கல்வி அறிவு என்பது வேறு. படிப்பறிவின்போது என்ன செய்கிறோம் என்றால், அடுத்தவர்களின் அறிவை நாம் உள் வாங்குகிறோம். கல்வியறிவு என்பது உள்ளே இருக்கின்ற ஆற்றல் வெளியில் வருவது இரண்டும் நேர் எதிரானது. நம்முடைய நாட்டில் நிறைய படித்து விட்டார்கள். அதனால்தான் அறிவே இல்லை. அறிவு என்பதென்னவென்றால், தொட்டணைத் தூறும் மணற்கேணி. அந்த மணற்கேணியில் தோண்டத் தோண்ட தண்ணீர் வருவது மாதிரி உள்ளிருந்து அறிவு வெளிப்பட வேண்டும்."


"இந்த நாட்டில் இன்னமும் 28 கோடி பேர் பசியோடு தூங்கப் போகிறார்கள். 75 சதவீதம் ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ‘சோகை’ நோய் இருக்கிறது. இரத்தத்தில் இரும்புச் சத்து இல்லை. 57 சதவீதம் குழந்தைகளுக்கு கண் பார்வை சரியாக இல்லை. வைட்டமின் ‘கி’ பற்றாக் குறையாக இருக்கிறது. இதற்கு என்ன காரணமென்றால், தாய் வயிற்றில் இருக்கும் போதிலிருந்தே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவில்லை. நம்மால் சத்தான உணவைக் கொடுக்க முடியவில்லை. அப்புறம் எதை வைத்து ‘வளர்ந்து விட்டோம். வளர்ந்து விட்டோம்’ என்று சொல்கிறார்கள்? பெரும்பாலான மக்களுக்கு என்ன இல்லையென்று பார்த்தோமேயானால், அவர்களுக்கு என்று தனி சொத்து கிடையாது. அப்போது அவர்கள் பொது ஆதாரத்தை நம்பி இருக்கிறார்கள். அவர்களின் ஆடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. அவர்களின் மாடு பொது இடத்தில் மேய வேண்டி இருக்கிறது. இவர்கள் விறகை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. தண்ணீரை பொது இடத்திலிருந்து எடுக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாவற்றையும் தனியாரிடத்தில், ஒரு முதலாளி இடத்தில் ஒப்படைத்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது வறுமைக் கோட்டிற்கு உள்ளே இருக்கின்ற கோடானுக்கோடி மக்களை அழிவை நோக்கித் தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களை விளிம்புக்கு வெளியே இருக்கின்ற மக்கள் என்று சொல்வார்கள். அவர்களை மேலும் சாவை நோக்கித் தள்ளுவதற்குத்தான் இந்தத் திட்டங்கள் எல்லாம் செல்லுபடியாகும்.
ஆக, கிராமங்களில் இருக்கின்ற நிலங்கள் மூன்றே மூன்றிற்குத்தான் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஒன்று: மழைநீர் பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்காதபடி அங்கேயே குளம் வெட்டுவதற்குப் பயன்படுத்த வேண்டும்.
இரண்டு : அங்குள்ள ஆடு, மாடுகள் மேய்வதற்காக மேய்ச்சல் நிலங்களை உண்டு பண்ண பயன்படுத்த வேண்டும்.
மூன்று. : அங்கேயும் காற்று சுத்தமாக, மழை வர, குளிர்ச்சி நிலவ வேண்டும் என்பதற்காக மரங்களை நட பயன்படுத்த வேண்டும்."


"இந்தியா ஒன்றும் இங்கிலாந்து அல்ல; இங்கிலாந்தில் நான்கு மாதங்கள்தான் வெயில் அடிக்கும். இங்கு 12 மாதமும் வெயில் அடிக்கிறது. ஒருவனிடம் தண்ணீரையும் நிலத்தையும் கொடுத்துவிட்டால் அந்தக் குடும்பம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளும். அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தை முதல் வயதானவன் வரை அந்நிலத்தில் வேலை செய்வார்கள். அவ்வளவு ஏன் அவன் கழிக்கும் மலம் ஜலமே செடி கொடிகளை வளர்த்து விடும். அதானே எரு. அவன் வைத்திருக்கும் ஆடு சாணி போடும். மாடு சாணி போடும். ஆட்டு பாலை குழந்தை குடிக்கும். மாடு கொடுக்கும் பால் தயிராகி அவர்களின் சாப்பாட்டிற்கு சேரும். சக்தி தரும் ஒரு முருங்கை மரம் போதும் அவர்களுக்கு. ஒரு பப்பாளி மரம் போதும் அவர்களுக்கு. இவர்களுக்கு நிலமே இல்லாத வேலைகளைத்தான் இந்த வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் செய்கிறது. உடனடியாக நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், இன்றைக்கு வளர்ச்சித் திட்டம் என்று எதை எதையோ செய்து கொண்டிருக்கிறோமே, அதை உடனடியாக நிறுத்திவிட வேண்டும். போட்டதை அப்படியே போட்டு விட்டுத் திரும்பி நிற்க வேண்டும். எங்கிருந்து நாம் தப்பு செய்தோமோ அந்த இடத்திற்குத் திரும்பிப் போனதற்கு பிற்பாடுதான் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க வேண்டும். உதாரணத்திற்கு எங்கு நம்முடைய தப்பு ஆரம்பித்ததென்றால், ‘பசுமைப் புரட்சி’யில்தான் ஆரம்பித்தது. பசுமைப் புரட்சிக்கு முன்னால் என்ன நடந்ததென்றால், நான் என்னுடைய அப்பா நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் வயலில் வேலை செய்து விட்டுத்தான் பள்ளிக்கூடம் போக வேண்டும். பதினொன்றாம் வகுப்பு வரையிலும் அப்படித்தான் போனோம். அன்றைக்கு என்னுடைய அப்பா என்ன செய்யவில்லை என்றால் விவசாய உற்பத்திக்காக டவுனிலிருந்து எதையும் வாங்கவில்லை. அவர் டவுனிலிருந்து விவசாயத்திற்காக ஏதாவது வாங்கி இருந்தால் அது: கொழுவடிப்பதற்காக இரும்பு வாங்கி இருக்கிறார். கடப்பாறை வாங்கி இருக்கிறார். அறிவாள் வாங்கி இருக்கிறார். மண்வெட்டி வாங்கி இருக்கிறார். ஆக, இரும்புச் சாமான்கள் மட்டும்தான் வெளியில் வாங்கியது. மற்றபடி எங்கள் வயல்வெயில் இருக்கின்ற இலை தழைகளையே எருவாகப் பயன்படுத்திக் கொண்டோம். வரப்புகளில் இருந்த மரத்தை வைத்தே வீட்டிற்கு கட்டில், ஜன்னல், கதவு, பீரோ, வண்டி என்று சகலத்தையும் செய்து கொண்டோம். உள்ளூர் ஆசாரியார் இவற்றை அழகாக செய்து கொடுத்து விட்டார். நாங்கள் அதற்கு ஈடாக களத்தில் நெல் அடிக்கும் போது அரிசி, சாப்பாடு என்று கொடுத்துவிட்டோம். முடி திருத்தும் தொழிலாளியின் வீட்டுப் பெண்தான் எங்கள் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தார். அவருக்கு நெல் கொடுத்தோம். இராத்திரி சாப்பாடு எங்கள் வீட்டிலிருந்து தான் அவர் வீட்டிற்குப் போகும். இப்படித்தான் எல்லோரும் பகிர்ந்துண்டோம்.எங்கள் அப்பா எங்கள் தாத்தா கொடுத்த இரண்டு ஏக்கர் நிலத்தை பத்து ஏக்கராக மாற்றி, அவரது நான்கு மகன்களுக்கும் ஆளுக்கு இரண்டு ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்தார். ஆனால், இன்றைக்கு என்ன நடக்கிறது? இரண்டு ஏக்கர் வைத்திருந்தால் ஒரு ஏக்கரை விற்று பையனை இஞ்ஜினீயரிங் காலேஜுக்கு அனுப்பிவிட்டு இன்னொரு ஏக்கரை விற்று மகளுக்குக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு விவசாயி ஓட்டாண்டியாக தெருவில் நிற்க வேண்டியதுதான். இதற்குக் காரணம் பசுமைப்புரட்சி. அந்தப் பசுமைப்புரட்சி என்பது எல்லாவற்றையும் வெளியில் வாங்கிச் செய்யும் விவசாயமாக மாற்றி விட்டது. கிராமத்தை உறிஞ்சுவது, சுரண்டுவது என்பது பசுமைப்புரட்சியிலிருந்துதான் ஆரம்பமானது"


"விவசாயப் பெண் பள்ளிக்கூடம் போய் இருக்க மாட்டாள். அவள் ஒரு விடுகதை போட்டாள். என்ன விடுகதை போட்டாள். ‘அடி காட்டுல. நடு மாட்டுல. நுனி வீட்டுல.’ அறுக்கும்போது அடியில் இருக்கின்ற கட்டையை காட்டில் விட்டோம். நடுவில் உள்ளது மாட்டிற்குச் சென்று விட்டது. நுனியில் உள்ளது வீட்டிற்கு வந்துவிட்டது. அடிக்கட்டைக்கு விவசாயி காசு செலவழிக்கவில்லை. நடுவில் இருந்த மாட்டிற்கு காசு செலவழிக்கவில்லை. வேண்டாததை மண்ணிற்குக் கொடுத்தார். வேண்டாததை மாட்டிற்குக் கொடுத்தார். பால் வீட்டிற்கு வந்தது. சாணி மண்ணிற்குப் போய்விட்டது. பயிர் விளைந்து கொண்டே இருந்தது. அப்போது விளைந்தது வீட்டில் இருந்தது. நீங்கள் கடனை வாங்கி, கடனுக்கு யூரியாவையும், டிஏபியையும் போட்டதால் நிறைய விளைந்திருக்கிறது. ஆனால், விவசாயி கையில் ஒன்றுமில்லை. ஏனென்றால் விளைந்ததை விற்று கடன் அடைத்திருக்கிறார். இன்றைக்கு நாடு முழுவதும் உள்ள 112 கோடி பேர்களில் 65 சதவீதம்பேர், அதாவது 73 கோடி பேர் கிராமத்தில்தான் உள்ளோம். இந்த 73 கோடி பேர்களை கிராமத்தில் பட்டினி போட்டுவிட்டு அப்புறம் என்ன நீங்கள் விளைய வைக்கவில்லை.. விளைய வைக்கவில்லை என்று வாயாடுகிறீர்கள். இங்கே எல்லோருக்கும் எங்கே சாப்பாடு போட்டீர்கள்.?"


"இந்த ரசாயனப் பொருட்களை நிலத்தில் போட்டதால் நிலம் உப்பாகப் போய் இனிமே ஒரு தானியம் கூட இருக்க முடியாது. இதை ஆரம்பித்ததே மிகவும் வளமான பகுதிகளில்தான் ஆரம்பித்தார்கள். இந்தியா முழுவதும் எங்கெல்லாம் ஆறுகள் நிறைய பாய்கின்றதோ அங்கே ஆரம்பித்தார்கள். வடக்கே ஒரு பஞ்சாப் இருக்கிறது. அங்கே ஐந்து ஆறு பாய்கிறது. அங்கே ஆரம்பித்தார்கள். இங்கே தென்னிந்தியாவில் ஒரு பஞ்சாப் இருக்கிறது. (பஞ்சாப் என்றால் ஐந்து ஆறுகள் என்று பொருள்) இங்கும் ஐந்து ஆறுகள் பாய்கிறது. அதுதான் திருவையாறு. நம்முடைய காவிரி வட்டம் முழுவதும் இதைப் புகுத்தினார்கள். எங்கெல்லாம் ஆறு பாய்ந்து செழிப்பாக இருந்ததோ அங்குதானே பசுமைப் புரட்சியை புகுத்தினீர்கள்? அங்கெல்லாம் இன்று ஒன்றும் விளையாத கட்டத்திற்குப் போய் விட்டது பூமி. அன்றைக்கு இதுதான் ஒரே வழி என்று சொன்னீர்களே? இது எப்படி சரியான வழியாகும்? அப்போது ஒவ்வொரு நாளுக்காகவும் ஒவ்வொரு திட்டத்தையா போடுவீர்கள்? இன்றைக்கு என்ன சொல்கிறார்கள். நிலைத்த, நீடித்த, வேளாண்மை என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்கிறார்கள். நிலைத்த நீடித்த வளர்ச்சி என்னவென்றால், இன்றைய தேவைக்காக நீங்கள் ஒன்றைச் செய்ய வேண்டும். ஆனால் அது நாளைய தேவையைக் கெடுத்துவிடக் கூடாது. அதற்கு பெயர் தான் sustainable டெவலப்மெண்ட். அந்த சஸ்டைனபுலிட்டியை இப்போது இழந்து விட்டு நிற்கிறோம். ஆக, அன்றைக்கு அதைச் சரி என்று சொன்னது நியாயம்தானே என்றால், அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் கிடையாது.அன்றைக்கு அமெரிக்காக்காரன் சொன்னதைப்போல சொன்னீர்கள். அதில் அமெரிக்காக்காரனுக்கு லாபம் இருக்கிறது. வட்டிக்குக் கொடுத்திருக்கிறான். அதற்காக உங்களிடமிருந்து வட்டி வாங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய ரசாயணப் பொருட்களையெல்லாம் நம்மிடம் விற்றிருக்கிறான். நம்முடைய பூமியை நாசமாக்கி இருக்கிறான். நம்முடைய நுகர்வோரை விஷமாக்கி இருக்கிறான். நுகர்வோர் என்றால் 112 கோடியும் நுகர்வோர்தான். மண்ணைக் கெடுத்திருக்கிறான். விவசாயியை பொருளாதார ரீதியாக நஷ்டத்தை ஏற்படுத்தி ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் பேர் கடந்த ஒரு பத்து வருடங்களுக்குள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை இவ்வளவு பெரிய விவசாயிகள் தற்கொலை உலகத்தில் வேறு எந்தத் தேசத்திலும் நடந்திருக்க முடியாது. ஒருலட்சத்து எழுபத்தைந்தாயிரம் விவசாயிகள் இன்றைக்கு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு தோற்றுவாய் பசுமைப்புரட்சியிலிருந்து தொடங்குகிறது.வெள்ளையன் ஒரு இருநூறு ஆண்டுகள் நம்முடைய நாட்டை ஆண்டான். அவன் என்ன செய்தான் ஷமீன்தாரை நியமித்து விவசாயிகளிடமிருந்து நிலத்தையெல்லாம் புடுங்கிவிட்டான். தூக்கி ஷமீன்தார் கையில் கொடுத்துவிட்டான். அப்போது சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தும் காந்தி காலத்திலிருந்தும் சுதந்திரம் வந்தால் நிலத்தை விவசாயிகளின் கையில் ஒப்படைப்போம் என்றார்கள். அதைச் செய்யவில்லை. ஆகையினாலே தான் பற்றாக்குறை. இன்றைக்கு வரை அந்த உண்மையை மூடி வைத்துக் கொண்டு பற்றாக்குறையால்தான் ‘பசுமைப் புரட்சி’யைக் கொண்டு வந்தோம் என்கிறார்கள். வரலாற்றையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை. வரலாற்றையும், விஞ்ஞானத்தையும் ஒழுங்காகப் பார்க்கவில்லை என்றால் நம் முன்னேற்றத்திற்கான எந்த வெளிச்சமும் நமக்குக் கிடைக்காது."


"நம்முடைய கரிகாலச்சோழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்தக் கல்லணையைக் கட்டியதாகச் சொல்கிறார்கள். இங்கிலாந்துகாரன் இங்கு வந்து கல்லணையைப் பார்த்தபோது அவனுடைய தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தினானாம். ஏனென்றால், எப்படிடா தண்ணீர் பாயும் மணல் ஆற்றில் அணையைக் கட்டி இருப்பான் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆகவே அப்படி மரியாதை செய்திருக்கிறான். காட்டாற்றில் தண்ணீர் போய்க் கொண்டே இருக்கும். ஒரு வருடத்திற்குள் கட்டி முடிக்கப்படுகின்ற வேலையுமல்ல இது என்று மலைத்திருக்கிறான். ‘‘இந்த அணையைக் கட்டுவதற்காக இங்கு முதல் கல்லைப் போட்டானே அந்த மனிதனுக்கு என்னுடைய வணக்கம்’’ என்று அவன் சொன்னதாக வரலாற்றில் எழுதி இருக்கிறார்கள். ஆக, அந்தச் சாதனை மிக்க அணையை கரிகாலச் சோழன் கட்டி இருக்கிறான். அணையென்றால் நீரைத் தேக்கி வைத்து பிறகு தண்ணீரைத் திறந்து விடும் அணையல்ல; கொள்ளிடத்திற்கு அதிகமாகச் சொல்லும் தண்ணீரை அணையிட்டு தடுத்துவிட்டோம் என்றால், அதில் குறிப்பிட்ட அளவிற்கான தண்ணீர் காவிரி ஆற்றில் போய்க் கொண்டே இருக்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் காவிரி அக்கரை தாங்காது. ஆகவே இதைக் கட்டி இருக்கிறான். அதற்கப்புறம் ஒரு விஷயம், பெரிய மன்னர்களை ஒளவையார் பாடவே இல்லை. கரிகாலனை மட்டும்தான் பாடி இருக்கிறாள். பாடும் போது என்ன சொல்கிறாள் என்றால், ‘‘காடு கொன்று நாடாக்கினான். குளம் தொட்டு வளம் பெருக்கினான்’’ என்று எழுதுகிறாள். சரி தானே?ஆக, காவிரி மண்டலத்திலும் நிறைய குளங்களாகவே வெட்டி வைத்திருந்திருக்கிறார்கள். ஏனென்றால், காவிரியில் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டும்தான் தண்ணீர் வரும். அதற்காக எங்குப் பார்த்தாலும் குளங்கள் வெட்டினார்கள். தேக்கிய நீரை வருடம் முழுவதும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இன்றைக்கு ஆற்று ஓரத்தில் தொழிற்சாலைகளை உண்டாக்கி வைத்துக் கொண்டு ஆற்று நீர் முழுவதையும் சாக்கடையாக்கி வைத்திருக்கிறோம். உடனடியாக நாம் செய்தாக வேண்டிய வேலை. ஆற்று ஓரங்களில் உள்ள எல்லா தொழிற்சாலைகளையும் பூட்டுப் போட்டு பூட்ட வேண்டியதுதான்"


"காந்தியே சொல்லி இருக்கிறார். ‘இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள் இருக்கின்றன. இந்த ஆறு லட்சம் கிராமங்கள் வாழ்ந்தால் இந்தியா வாழ்கின்றதென்று அர்த்தம். இல்லையென்றால் இல்லை’ என்றார். அப்போது இந்த ஆறு லட்ச கிராமத்தினையும் வளர விடாமல் செய்து பட்டணத்தை மட்டும் ஊதி ஊதிப் பெருக்கி இருக்கின்றோம். பட்டணமும் இன்றைக்கு நன்றாக இல்லை. எவ்வளவு நகரமாக இருந்தாலும் ஒரு சிலர் வரைதான் தாங்கும். அப்போது பட்டிக்காட்டை வறட்சியில் தொடரவிட்டு விட்டோம் என்றால், எல்லா மக்களும் சாப்பாட்டிற்காக நகரத்தில் வந்து மோதுகிறார்கள். வேலை வாய்ப்பில்லை. வீட்டு வசதியில்லை. குடிப்பதற்கு நீர் இல்லை. மருத்துவ வசதி இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி வசதி இல்லை. மறுபடியும் என்ன செய்திருக்கிறார்கள். கிராமத்திலிருந்த சேரிகளுக்குப் பதிலாக பட்டணத்துச் சேரிகளை உண்டு பண்ணி இருக்கிறார்கள். ஆகவே மறுபடியும் இந்த ஆறுலட்சம் கிராமத்தினையும் வாழக் கூடிய பூமியாக மாற்றினோம் என்றால், பட்டணத்தில் ஏகப்பட்ட மக்கள் நெரிசலை கிராமத்திற்குத் தள்ளிவிடலாம். அப்போது பட்டணத்தில் இருப்பவர்களுக்கும் சேர்த்து இவர்கள் உற்பத்தி செய்வார்கள்."


"வரலாற்றில் இரண்டு பெரிய தவறுகள் நடந்திருப்பதாக கனடா நாட்டு விஞ்ஞானி சுட்டிக் காட்டுகிறார். ஒன்று : 1938_39 DDT என்று ஒரு விஜத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த DDT விஷத்தை கிணற்றில், ஆற்றில் கலந்து விட்டால் எதிரிகள் நம்மீது படையெடுத்து வரும்போது அந்த தண்ணீரைப் பருகிவிட்டு இறந்து விடுவார்கள். அல்லது குடிக்க முடியாமல் திரும்பி விடுவார்கள். அந்த விஜத்தைக் கண்டுபிடித்து உயிரியைக் கொலை செய்யுமா என்று தெரிந்து கொள்வதற்காக பூச்சியின் மீது தெளித்தான். பூச்சி செத்து விட்டது. ஆனால் 1945_ல் போர் முழுக்க நின்று போய் விட்டது. உடனே இதை பூச்சி மருந்து என்று சொல்லி உலகம் முழுவதும் பரப்பினார்கள். ஆனால் தயாரித்தது எதற்கு? ஆட்களைக் கொல்வதற்கு. இந்த விஜத்தைக் கண்டுபிடித்தவன் பெயர் Paul Muller. இந்த Paul Muller 1948_ல் நோபல் பரிசையே கொடுத்தார்கள். மனித மேம்பாட்டிற்காக பாடுபட்ட விஞ்ஞானி என்று சொல்லி விருதைக் கொடுத்தார்கள். 1960_61_ல் என்ன தெரிய வந்ததென்றால், அந்த மருந்து மனிதனையெல்லாம் கொல்கிறது என்று தெரிய வருகிறது.அமெரிக்காவில் உள்ள மரத்தின் மீது வண்டுகள் இருக்கிறது என்பதற்காக ஹெலிகாப்டரில் கொண்டு சென்று மரத்தின் மீது இந்த மருந்தை தெளித்தார்கள். அந்த மரத்தின் இலை பட்டு கீழே விழுந்ததை தின்று மண்ணில் இருந்த மண்புழு செத்து விட்டது. செத்த மண்புழுவைத் தின்ற பறவை செத்துப் போனது. ‘ராபின்’ என்ற ஒரு பறவை அங்கிருந்தது. அது என்ன செய்யுமென்றால் பனிகாலம் வரும் போது நாட்டை விட்டு வெளியில்போய் விடும். வசந்த காலம் வரும் போது சத்தம் போட்டுக் கொண்டு நாட்டிற்குள் திரும்பும். ஆக, வசந்தம் வரப்போகிறது என்று ‘கட்டியம்’ கூறக் கூடிய பறவை அது. இப்போது அந்தப் பறவையையே அங்கு காணோம். இதையெல்லாம் பார்த்து விட்டு கடல் விஞ்ஞானி ராச்சேல் கார்சன் என்பவள் ஒரு புத்தகத்தை எழுதினாள். எழுதிய அடுத்த வருடமே அவள் கேன்சர் நோயினால் இறந்து போனாள். DDT என்ன செய்யுமென்றால், நம்முடைய உள்ளுறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி விந்து சுரப்பதையே நிறுத்தி விடும். உள்ளுக்குள்ளே புற்று நோயை வளர்க்கும். அந்தப் புத்தகத்தைப் படித்த அந்நாட்டு மக்கள் அபாயத்தை உணர்ந்து பின் போராடி அதைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களின் தேசிய பறவை வழுக்கை தலை கழுகு காணாமல் போய்விட்டது. ஹெலிகாப்டரில் தெளிக்கும் மருந்து மரத்தின் மீது மட்டுமே விழாது. அது பக்கத்தில் இருக்கும் ஆறு, ஏரிகளின் மீதும் விழும். அப்படி விழுந்து நீரில் கலந்த அந்நீரைப் பருகிய மீன்கள் நோய்வாய் பட்டு மெதுவாக நீந்தின. அதை சுலபமாக வேட்டையாடி உண்ட கழுகுகள் இறந்து போயின. இவ்வளவு பெரிய தீங்கை கண்டுபிடித்த விஞ்ஞானிக்குத்தான் நாம் நோபல் பரிசை கொடுத்திருக்கிறோம். அதே போல குளோரோ ஃபுளோரோ கார்பன் வாயுவைக் கண்டுபிடித்தவனுக்கு பரிசு கொடுத்தார்கள். இதைத் தான் ஏர் கண்டிஷனில் எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த வாயுதான் ஓசோன் மண்டலத்தை ஓட்டை போடுகிறது. இந்த வாயு காற்றை விட லேசானது. அதனால் அது ஓசோன் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகிறது. ஓசோன் என்றால் என்ன அர்த்தம்? ஆக்ஸிஷன் அடர்த்தியாக இருக்கிறதென்று அர்த்தம். ‘ஓ’ என்றால் ஆக்ஸிஜன். பொதுவாக ‘ஓ’ என்பது இரண்டாக (O2) இருக்கும் இதில் ‘ஓ’ மூன்று அனுவாக இருக்கிறது. இந்த வாயு ஓசோனின் காற்றுத் திரையைக் கிழித்துக் கொண்டு மேலே போகும் போது குளோரின் தனியாகப் பிரிந்து விடுகிறது. பிரிந்ததும் கனமாகி கீழே இறங்குகிறது. அப்போது ஓசோனை ஓட்டை போடுகிறது. இதனால் என்ன நடக்கிறது. சூரியக் கதிர்கள் வடிக்கப்படாமல் கீழே இறங்குகின்றன. அதனால் நமது தோலில் புற்றுநோய் உண்டாகிறது. ஆக, விஞ்ஞானம் என்றாலே முன்னேற்றமானது என்று நினைப்பவனை விட முட்டாள் வேறு ஒருவன் இருக்க மாட்டான். முன்னேற்றமாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். அதான் சரி."

http://naagarajan.blogspot.in/2008/11/blog-post_20.html

காடுகள் பரப்பளவு குறைந்து விட்டது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வருத்தம்

         "தமிழகத்தில் காடுகளின் பரப்பளவு படிப்படியாக குறைந்து வருவதால், பருவ மழை தவறி வருகிறது," என, பள்ளி விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
          கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில், 13வது ஆண்டு அனைத்து மன்ற துவக்க விழா நடந்தது. விழாவில், இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
          "இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காஃபி மற்றும் டீ ஆகியவற்றை பயிரிட காடுகள் அழிக்கப்பட்டது. இந்தியாவில் வளர்ந்திருந்த தரம் நிறைந்த மரங்களை எல்லாம், ஆங்கிலேயர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்.
           மேற்கு தொடர்ச்சி மலை, கடல் மட்டத்தில் இருந்து 3,000 அடி உயரத்தில் இருந்தது. அதிலிருந்து 300, 400 அடி உயரத்தில் மரங்கள் இருந்தது. தற்போது அந்த மரங்கள் எல்லாம் காணவில்லை. கடந்த 1900ம் ஆண்டுகளில் ஆண்டுக்கு 350 நாட்களுக்கு மேல் மழை பெய்தது. 1950ம் ஆண்டுகளில் 200 நாட்கள் மழை பெய்தது. தற்போது ஆண்டுக்கு 50 நாட்களில் மழை பெய்வது இல்லை. இதற்கு காரணம் மரங்களை வெட்டியதுதான்.
           கடந்த 1950வது ஆண்டுகளில் 33 சதவீதமாக இருந்த காடுகளின் பரப்பளவு தற்போது படிப்படியாக குறைந்து எட்டு சதவீதமாக உள்ளது. இதனால், பருவமழை தவறி விட்டது. பருவமழையை நம்பி, விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கினர். ஆனால், பருவமழை தவறி விட்டதால், விவசாயிகளால், சாகுபடி பணிகளை கணிக்க முடியவில்லை. புயல் மழையை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது." இவ்வாறு அவர் பேசினார்.

http://www.padasalai.net/2013/07/blog-post_9244.html

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வலியுறுத்தினார்.
 சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், "உழவுக்கும் உயிர் உண்டு' என்ற தலைப்பில் இயற்கை வேளாண் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. மேலாண்மை துறையைச் சேர்ந்த தளிர் மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:
 இயற்கையைவிட்டு நீண்ட தொலைவுக்கு நாம் விலகி வந்துள்ளோம். இதனால்தான், உணவு முறைகளைக் கொண்டு சரி செய்யக் கூடிய நீரிழிவு நோய்க்கு பன்னாட்டு மருந்துகளை வாங்கி தீர்வு காண முயல்கிறோம்.
 இயற்கையைவிட்டு நாம் விலகியதால்தான், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அனைத்து பிரச்னைகளுக்கும் இயற்கையை அணுகினால், தீர்வு எளிதாகக் கிடைக்கும். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. "நீரின்றி அமையாது உலகு' என்ற தத்துவத்தை நாம் கடைப்பிடிக்காததன் காரணமே இந்த விளைவுகள். 
 நம் முன்னோர்கள் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய பள்ளமான இடங்களில் ஏரிகளை அமைத்தனர். தற்போது, ஏரிகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இயற்கை நமக்காக தொண்டு செய்யும் போது, ரசாயன உரங்கள் நமக்கு தேவையில்லை.
 உரங்களால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில், 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இதற்கு கருத்துத் தெரிவித்த திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் விவசாயம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார்.
 பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விவசாயம் சென்று விட்டால், உணவுக்கு பஞ்சம் ஏற்படுவது உறுதி. பன்னாட்டு நிறுவனங்கள் விதையில் விஷத்தை கலந்து தருகின்றன. அதனால்தான், இயற்கை விவசாயம் அழிந்து வருகிறது. 
 இயற்கை விவசாயம் வளர வேண்டுமானால், வேளாண் உற்பத்தி விதைகள் விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும். மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கக் கூடாது. விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றார் நம்மாழ்வார்.
 கருத்தரங்கில் சோனா கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவர் லதா கிருஷ்ணன், நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் ராஜா, தளிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் அஹமது மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


http://dinamani.com/edition_dharmapuri/salem/2013/04/25/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/article1560991.ece

பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு காரணம்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

             பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு முக்கிய காரணம் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
 ÷கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், "பாரம்பரியம் போற்றுவோம்' என்ற தலைப்பில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நம்மாழ்வார் பேசியது:
 ÷இன்றைய சூழலில் விஞ்ஞானம் என்ற பெயரில், நமது இயற்கை வளங்களை அழித்து வாணிபம் நன்றாக வளர்ந்துள்ளது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருளாக இருந்தாலும் காசு கொடுத்து வாங்கி விட்டோமே என்று பயன்படுத்துகிறோம். பச்சைக் காய்கறிகளை தவிர்த்து, வேக வைத்த செத்தவற்றை சாப்பிடுகிறோம்.
 ÷பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு முக்கிய காரணம். உடலில் ஏற்படும் வலி ஒரு நோயல்ல; உடல் தனது நிலையை குணப்படுத்த எடுக்கும் முயற்சியே அது. நல்ல உடல் நலத்தைப் பேண நான்கு வழிகள் உள்ளன. பசி வந்தால் மட்டும் சாப்பிடுங்கள்; தாகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்; சோர்வு வந்தால் படுத்துவிடுங்கள்; தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள். அந்த நேரத்தில்தான் உடல் தன்னை தயார் செய்து கொள்ளும்.
 ÷இப்போது விஞ்ஞானம் முன்னேறிவிட்டது என்கிறார்கள். அப்படியிருந்தால் ஏன் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒளவையார் கூறியுள்ளார். நோய் வந்துவிட்டாலே செல்வம் போய் விட்டதே.
 ÷திருப்பூரிலிருந்து ஒரத்துப்பாளையம் அணை வரை நொய்யல் ஆற்றங்கரையில் 33 கி.மீ. தூரத்துக்கு சாயப்பட்டறைகளால் குடிநீர் சாக்கடையாக மாறியுள்ளது. வழியில் உள்ள அனைத்துக் கிணறுகளும் சாக்கடைகளாக மாறியுள்ளன. அனைத்தும் நமது செயல்.
 ÷நமது மூதாதையர்களின் ஞானத்துக்கு ஈடு, இணை இல்லை. அவற்றைப் பின்பற்றுங்கள்.
 இலங்கையில் மனித உயிர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களால் நாடு உயிர்த் துடிப்போடு உள்ளது என்பதை உணர முடிகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார்.


http://dinamani.com/agriculture/article1510562.ece

அரிசிக்கு வருகிறது ஆபத்து- இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.


துரையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் பேசிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் " மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் இப்போதைய அரசுகள் மக்கள் நலனுக்கான அரசுகளாக இல்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் நடைபெறுகிறது. வெற்றி பெற்று வருபவர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்கு பதில் பன்னாட்டு நிறுவனங்களில் ஏஜெண்டுகளாக சேவை செய்து வருகிறார்கள். கலையை ரசித்து பார்க்க கூடிய அளவிற்கு விவசாயிகளின் வாழ்க்கை இல்லை. அவர்களது வாழ்நிலை மோசமாக இருக்கிறது. கிராமப்புறங்கள் தரிசாகி வருகின்றன. நிலத்தை உழுத மாடுகள் இறைச்சிக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

நம்மாழ்வார்
சாலையோர மரங்கள் வெட்டி சாய்க்கப்படுகின்றன. நம்நாட்டின் வளம் முழுவதும் அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய்படுகிறது. தமிழகத்தில் 10 ல் 4 பேருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. புரட்சி என்பது சிவப்பாகத் தான் இருக்கும். பசுமையாக இருக்காது. தமிழத்தில் பசுைப்புரட்சி ஏற்பட்டு விட்டதாக சொன்னார்கள். அது எப்போது? தமிழத்தின் தேவை வெளி மாநிலங்களின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. ஆறுகள் மாசுபடுத்தப்படுகின்றன. விவசாயிகளின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பதுக்கல் வர்த்தகம் நடைபெறுகிறது. 
விவசாயிகள் நிலங்களை விற்று விட்டு நகரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். மண்ணைப்பற்றியோ மக்களை பற்றியோ ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை. தமிழகத்தில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்கள் மான்சான்டே போன்ற வெளிநாட்டு விதை கம்பெனிகளின் ஆராய்ச்சிக்கூடங்களாக மாறி விட்டன. அரிசியிலிருந்து 12 பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு வருங்காலத்தில அரிசி இருக்குமா என்பதே சந்தேகமாக உள்ளது. அரிசிக்கே ஆபத்து வரக்கூடிய சூழல் உள்ளது. இப்போது திராட்சை பழம் பூச்சிக் கொல்லி மருந்துகளால் நிரம்பி இருக்கிறது. திராட்சை பழங்களை உண்ணாதீர்கள்.
இவ்வாறு நம்மாழ்வார் பேசினார். என்ன நடக்குமோ இனி எதிர்காலத்தில்! 
நமது கருத்து
நமது விவசாயிகள் விதைத்து வந்த பாரம்பரியமான நெல் ரகங்கள் அனைத்தும் கண்காட்சி பொருளாக மாறிவிட்டன. நாட்டு ரக நெல் விதைகளை இப்போது யாரும் விதைப்பதில்லை. இப்போது இருப்பவை பெரும்பாலும் வீரிய ரகங்கள் தான். இப்படி அனைத்திலும் புதிய கண்டுபிடிப்புகளும், வீரிய ரகங்களும் வந்துள்ளன. இவற்றை தாக்கும் பூச்சிகளை ,நோய்களை விரட்ட புதிய புதிய மருந்துகளை விவசாயிகள் வாங்கி குவிக்க வேண்டியதிருக்கிறது.

எல்லாவற்றையும் முடித்து விட்டு அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு போனால் விவசாயிக்கு கிடைப்பது நாமம் தான் என்றே பொதுவான பேச்சு இருக்கிறது. இப்படி இருந்தால் யார் விவசாயம் செய்ய முன்வருவார்கள்? ஆக..அரிசிக்கு ஆபத்து தான் இனி!

நாற்பது நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது!


நாற்பது நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது!
 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு!

புதுக்கோட்டையை அடுத்த வாகைப்பட்டி கிராமத்தில் அன்பழகன் இயற்கை விவசாய பண்ணையில் ரோஸ் நிறுவனம் நபார்டு வங்கியுடன் இணைந்து பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைத் திருவிழா நடத்தியது. 
மக்கள் மத்தியில் அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் இரகங்களை மீண்டும் சாகுபடி செய்து, இக்கால விவசாயிகள் மத்தியல் அறிமுப்படுத்துவதே இப்புதுமைப் பண்ணை திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சிறப்புரையாற்றிய இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர்.நம்மாழ்வார், 
உலகில் உள்ள நாற்பது நாடுகளில், இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத்தீவனமாக மாற்றப்படுகிறது. கோதுமை, சோயாமொச்சை, மக்காச்சோளம், கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன. உலகில் வாழும் மக்களில் பாதிப்பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.

நம்முடைய முன்னோர்கள் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களையும், சிறுதானியங்களையும் பயிரிட்டு நோயில்லா வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்;. ஆனால் அவைகளெல்லாம் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டன. நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை போக்குவதற்கு வீட்டிற்று ஒரு பேரிச்சை மரம் வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைத் திருவிழாவில் அன்னவாசல், குண்ணன்டார்கோவில், பொன்னமராவதி, அரிமழம், திருமயம், மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலிருந்து வந்திருந்த 350 விவசாயிகள் வந்திருந்தனர்.  கைவரைச்சம்பா, மிளகி, இலுப்பைப்பூசம்பா, செம்புளிச்சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, கருடன்சம்பா, பனங்காட்டு குடவாழை, சிவப்பு கவுனி, கருங்குறுவை, கருத்தக்கார், சண்டிகார், குறுவைக்களஞ்சியம், தங்கச்சம்பா போன்ற பாரம்பாரிய நெல் இரகங்களும், வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை மற்றும் திணை போன்ற சிறுதானிய இரகங்களும் 350 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.

தற்போது உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை குறைப்பது இப்பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய ரகங்கள். பாரம்பரிய நெல் ரகங்களும், சிறுதானியங்களும் வறட்சியையும், வெள்ளத்தையும் பூச்சி நோய் தாக்குதலையும தாங்கி வளரக்கூடியது. இவை மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கவல்லது.; கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய வல்லது.  இந்தியாவை அச்சுறுத்தி கொண்டிருக்கும், குழந்தைகள் சத்துக்குறைபாடை குறைப்பதற்கு மிகச் சிறந்த மாற்று நம் சிறுதானியங்களும் பாரம்பரிய நெல் ரகங்களுமே. 

இவ்வனைத்து பாரம்பரிய நெல் ரகங்களும், விவசாயிகள் மத்தியில் பரவலாக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் மக்களால் உட்கொள்ளப்பட்டால், மனிதனின் உடல் ஆரோக்கிய நிலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்ப்பட்டு சத்துக்குறைபாடு நீக்கப்பட்டுவதோடு மட்டுமல்லாது உயிர்பன்மயச்சூழலை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்று பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதை திருவிழாவில வலியுறுத்தப்பட்டது.

ஜெயராமன், சத்தியசீலன், அப்பாவு பாலாண்டார், தனபதி, வீராண்டான், அன்பழகன், ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், ஆதப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள். ரோஸ் நிறுவன திட்டப்பொறுப்பாளர் அகிலா வரவேற்றார், விஜயா நன்றி கூறினார். 

இரா.பகத்சிங்.

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை கருத்தரங்கு

                 இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு
வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான அங்கக வேளாண்மை கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:
  • உலகத்தை பயமுறுத்தும் அச்சுறுத்தல் பூமி வெப்பமயமாதல் ஆகும். பூமி வெப்பமயமாதல் காரணமாக கடல் மட்டம் உயர்ந்து, கடலோரப் பகுதிகளில வசிப்பவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் வரும்.
  • இதற்கு காடுகளை அழித்தல், பெருகி வரும் தொழில்சாலைகள், வாகனப் பெருக்கம், நவீன வேளாண்மை ஆகியவையே பெரும் காரணிகளாக உள்ளன. இதிலும், பூமி வெப்பமயமாதலுக்கு நவீன வேளாண்மை முறை 35 சதவீதக் காரணமாக உள்ளது.
  • பூமி வெப்பமயமாதல் காரணமாக பாதிக்கப்படப் போவது ஏழை நாடுகளே ஆகும். குறிப்பாக, இந்தியாவில் 44 கோடிப் பேர் வறுமையில் வாடுகின்றனர். இவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுவர்.
  • பூமி வெப்பமயமாதலுக்கான காரணத்தைக் கண்டறிந்து உடனே நிறுத்த வேண்டும். பூமி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் 150 ஆண்டுகள் ஆகும். நிலம்
    உயிரோட்டத்தை இழந்து கொண்டிருக்கிறது; வாழ்க்கை வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட உணவை உள்கொள்ளும் மக்களும் புற்றுநோய் உள்ளிட்டவற்றுக்கு ஆளாகின்றனர்.
  • கடந்த 15 ஆண்டுகளில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
  • இயற்கை விவசாயத்தின் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தைப் படைத்திட முடியும். இதற்கு, விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உதவ வேண்டும். மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் வேலைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்றார்.
அடுத்து பெங்களூரில் உள்ள அங்கக வேளாண்மை முகமை மற்றும் அம்ருதபூமி திட்டக் குழுவின் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த் பேசியது:
  • கர்நாடகத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் 100 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்கின்றனர். திராட்சையைத் தவி அனைத்து உணவுப் பொருள்களும் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • இயற்கை விவசாய முறையைக் கண்டறிந்துகொள்ள தமிழக விவசாயிகள், கர்நாடகத்திற்கு வந்து பார்வையிட வேண்டும். இரு மாநில விவசாயிகளும் தகவல் பரிமாற்றங்களைச் செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.
கேரளத்தில் உள்ள மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் ஆர்.இளங்கோவன் பேசியது:
  • விஷமாக்கப்பட்ட உணவுகளை உள்கொள்வதால் விஷ உணர்வுதான் மக்களுக்கு வருகிறது. இயற்கை விவசாயத்தை மேம்படுத்த பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அங்கக வேளாண் விவசாயி மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் கோ.சித்தர் பேசியது:
  • கடந்த 20 ஆண்டுகளாக தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். உடல் நலத்தைப் பேணிக் காக்க இயற்கை விவசாயத்தால் விளைவிக்கப்பட்ட பொருள்கள் பயன்படுகின்றன.
  • விவசாயி என்பவர் நல்ல வியாபாரியாகவும் இருக்க வேண்டும். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட பொருள்களை முறையான வகையில் அதிக விலை வைக்காமல் விற்பனை செய்து வருகிறேன். பாரம்பரிய நெல் ரகங்களைப் பாதுகாத்து, பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகளுக்கும் உதவி வருகிறேன் என்றார்.
நன்றி: தினமணி

“இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை”

இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பில்லை என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசினார்.

ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை இல்லத்தில் தேசிய நுகர்வோர் தின விழா மற்றும் தேசிய உழவர் தின விழா கிரியேட் அறக்கட்டளை சார்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிரியேட் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஆர்.பொன்னம்பலம் வரவேற்றார். விழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார்பேசியது:
  •  இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விவசாயிகளிடையே தற்போது அதிகரித்து வருகிறது.
  • பருவ கால மாறுபாடுகள் காரணமாக வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். கடனை திருப்பி அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  •  இயற்கை விவசாயம் செய்தால் கடன் வாங்க வாய்ப்பே இல்லை. ஏனெனில்  பாரம்பரிய நெல் ரகங்கள் 63 வகைகள் உள்ளன. இவற்றிற்கு அதிக விலைக்கு வாங்கி ரசாயன உரங்களைப்போட வேண்டியதில்லை.
  •  ஒருமுறை களை எடுத்தாலே போதும். வெள்ளத்தையும், வறட்சியையும் தாக்குப்பிடிக்கும் விவசாயமே இயற்கை விவசாயம்.
  •  மாடுகளுக்கும் வைக்கோல் அதிகமாகக் கிடைக்கும். மகசூலும் அதிகமாகக் கிடைக்கும்.
  • இயற்கை விவசாயத்தில் பயிர்களை நடுவதற்கு முன்பாக அந்த நிலத்தில் ஆடு, மாடுகளை இரவு நேரங்களில் தங்க வைத்தாலே மிக அதிகமான விளைச்சல் கிடைக்கும்.
  •  ராமநாதபுரம் மாவட்டத்தில் வேலிக்கருவை மரங்கள் அதிகமாக வளர்ந்து நிலத்தில் இருக்கும் தண்ணீர் அனைத்தையும் உறிஞ்சி விடுகிறது. இதனால் விவசாயத்திற்குப் போதுமான தண்ணீர் இல்லாமல் போய் விடுகிறது.
  • எனவே மாவட்ட நிர்வாகம் வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கோ.நம்மாழ்வார்.
நன்றி: தினமணி

பூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை

“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,” என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

தமிழக விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர்.
இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது:
  • தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கத்தரி, தக்காளி, வெண்டை என, அனைத்து தோட்டக் கலை பயிர்கள் மற்றும் நெல் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க என்டோசல்பான், மானோகுரோட்டம்பாஸ், எக்காளாக்ஸ் போன்ற ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
  • கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான, 12 ஆயிரத்து 500 ஏக்கர் முந்திரி தோட்டம் இருந்தது. இதில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஹெலிகாப்டர் மூலம் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அந்த மருந்து காற்றின் மூலம், சுற்றுப் பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்கு பரவியது. பூச்சிக்கொல்லி மருந்தை சுவாசித்த ஏராளமானோர் இறந்தனர். பொதுமக்கள் பலர் தோல் நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் குறை பிரசவ குழந்தைகள் அதிகம் பிறக்கிறது. இந்த பாதிப்பு பல தலைமுறைக்கும் தொடரும். அதனால், கேரளா அரசு என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு, நாடு முழுவதும் தடை விதிக்க போராடுகிறது.
  • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இயற்கை ஆர்வலர்களும், பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடைவிதிக்க கோரி, சுற்றுச்சூழல் அமைச்சர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • தற்போது, 72 நாடுகளில் தடை விதிக்கப்பட்ட, 17 வகை உள்ளிட்ட, 140 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள், இந்தியாவில் பயன்படுத்துப்படுகின்றன.
  • மற்ற நாடுகள் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், மக்கள் குறித்து கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இந்தியாவில் ஒரு குழுவினர் வெளிநாட்டு பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு சாதகமான செயல்படுகின்றனர்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தேனீக்கள், சிறு பூச்சிகள், பறவைகள் என, அனைத்துமே அழிகின்றன.
  • வேப்பிலை, நொச்சி, சோற்று கற்றாலை, எருக்கு, ஊமத்தை போன்றவை இயற்கையான பூச்சி விரட்டி மருந்துகளாகும். அதை காய்கறி தோட்டத்தில் பயன்படுத்துவதால், பூச்சிகளை விரட்டி அடிக்கப்படும். அவைகள் அழிந்து போகாது. சுற்றுச்சூழலும் பாதிக்காது.
  • மனிதர்களையும் கொடிய நோய் தாக்காது. தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது தொடருமானால், வருங்காலத்தில் கொடிய நோய்களால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.
நன்றி: தினமலர் 

இயற்கை விவசாயத்துக்கு திரும்புங்கள் – இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அழைப்பு

அதிக சத்து மற்றும் மருத்துவக் குணங்கள் நிறைந்த பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி செய்து மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு திரும்புமாறு விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அறைகூவல் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை அடுத்த வாகைப்பட்டியில் ரோஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பாரம்பரிய நெல் விதைகளை பாதுகாப்பது குறித்த விவசாயிகளுக்கான கருத்தரங்கு நடந்தது. இதை துவக்கிவைத்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
  • உணவு தானியங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வெளிநாடுகளிடம் ஆலோசனைகள் பெற்று நவீன ரக தானியங்களை குறிப்பாக நெல் ரகங்களை அறிமுகம் செய்தனர்.
  • இவற்றை சாகுபடி செய்வதற்காக பல வகையான இரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
  • இதன் விளைவாக நம் முன்னோர்கள் சாகுபடி செய்த பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் படிப்படியாக மறையத் துவங்கியது. ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதால் மண் வளம் பாதிக்கப்பட்டு விளை நிலங்கள் பாலைவனங்களாக மாறிவருகிறது.
  • கால்நடைகளுக்கு தீவன(வைக்கோல்) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • இவை எல்லாவற்றுக்கும் மேலாக நவீன ரக நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை சமைத்து சாப்பிடும் மனித இனம் வித விதமான நோய் தாக்குதலுக்கு உள்ளாகி பரிதவித்து வருவதை காண முடிகிறது.
  • இந்த நிலை மாறவேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் பின்பற்றிய பயிர் சாகுபடி முறைகளை நாமும் பின்பற்றவேண்டியது அவசியமாகிறது.
  • இதற்காக தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் பாரம்பரியமிக்க நெல் விதைகளை தேடி கண்டு பிடித்து அவற்றை இயற்கை விவசாய முறையில் சாகுபடி செய்து விதைகளாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்குவதென முடிவு செய்துள்ளோம். எங்களுடைய இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கருடன் சம்பா, பனங்காட்டு குறுவை, சிவப்பு கவுணி ஆகிய 5 வகையான பாரம்பரியமிக்க நெல் விதைகள் இயற்கை விவசாயத்தை மட்டுமே பின்பற்றி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
  • புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தளை, வாகைப்பட்டி, மாணிக்கம்பட்டி, வடசேரிப்பட்டி, மேலூர், கீழமுத்துடையான்பட்டி,, மேல முத்துடையான்பட்டி, முத்துக்காடு, சுந்தரக்காடு, மேலப்பளுவஞ்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 விவசாயிகள் கிட்டத்தட்ட 10 ஏக்கர் நிலத்தில் இவற்றை சாகுபடி செய்து மகசூலில் சாதனை படைத்துள்ளனர்.
  • இதன்மூலம் 300 மூடை நெல் ரகங்கள் கிடைத்துள்ளது.
  • இவற்றை தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு விதையாக விற்பனை செய்து பரவலாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளத.
  • இவை தவிர செம்புளிச்சம்பா, சூரக்குறுவை, இலுப்பைப்பூ சம்பா, சண்டிகார், கருத்தக்கார் ஆகிய 6 வகையான பாரம்பரியமிக்க நெல் ரகங்களும் விரைவில் பரவலாக்கம் செய்யப்படும்.
  • பாரம்பரிய நெல் விதைகளை பொறுத்தமட்டில் வறட்சி மற்றும் வெள்ளத்தை தாங்கி வளரும் தன்மையுடையது.
  • குறைந்த செலவில் அதிக மகசூல் கிடைக்கும்.
  • நேரடி விதைப்பு மற்றும் நடவுக்கு உகந்தது.
  • மண் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். உயரமாக வளரும் ஆற்றல் படைத்தது என்பதால் கால்நடைகளுக்கு தீவன(வைக்கோல்) தட்டுப்பாடு இருக்காது.
  • நாம் தற்போது பயன்படுத்திவரும் அரிசி ரகங்களை விட பல மடங்கு புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து மிக்கது என்பதால் இவற்றை சமைத்து உண்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.
  • எதிர்கால நம் சந்ததியினர் உடல் ஆரோக்கியத்துடன் நோயற்ற வாழ்வு வாழவேண்டும் என விரும்பினால் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரியமிக்க நெல் ரகங்களை சாகுபடி செய்ய விவசாயிகள் அனைவரும் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினமலர்

இயற்கை விவசாய காய்கறிகளில் தான் சத்துகள் அதிகம் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தகவல்

ராமநாதபுரம்,
இயற்கை விவசாய காய்கறிகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து 2நாட்கள் பயிற்சி முகாம் போகலூர் யூனியன் எட்டிவயல் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:–
சூரியனின் வெளிச்சம் இலைகளின் மீது படுவதால் இலைகளுக்கு உணவு கிடைக்கிறது. இதனால் வெப்பம் மீண்டும் வானத்துக்கு செல்வதில்லை. மக்கள் மரம் செடிகளை அதிகம் வளர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையினர் நன்றாக வாழ்வதற்கு இயற்கை விவசாயம் செய்யவேண்டும். உரங்களை போட்டு பயிர்களை வளர்ப்பதில் எந்த சத்தும் கிடைப்பதில்லை. மாறாக நோய்கள் தான் உருவாகின்றன. இதனால் புதிய ஆஸ்பத்திரிகள், மருந்துகடைகள் தோன்றுகின்றன.
மூலிகை செடிகள்
இயற்கை விவசாயத்தின் மூலம் விளையும் காய்கறிகளில் சத்துகள் நிறைந்துள்ளன. இந்த முறை மூலம் முட்டைக்கோஸ் பயிரிட்டால் அவற்றை சமைக்க வேண்டியதில்லை. அப்படியே பச்சையாக சாப்பிடலாம். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும்.
இந்தியாவில் 90 ஆயிரம் வகையிலான தாவரங்கள் மருந்தாக பயன்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மூலிகை செடிகளை வளர்க்கவேண்டும். அந்த செடிகளின் பயன்கள் குறித்து மாணவ–மாணவிகளுக்கு விளக்கி கூறவேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட உணவுகளை நாம் இன்று சாப்பிடுவதில்லை. விரைவாக சமைத்து விரைவாக சாப்பிடவேண்டும் என்று விஷத்தை சாப்பிட்டு வருகிறோம். இதனால் நோய்கள் தான் உருவாகி வருகின்றன. காற்றும், தண்ணீரும் பூமியில் சமநிலையில் இருந்தால்தான் மரங்கள் செடிகள் நன்றாக வளரும்.
இவ்வாறு அவர் பேசினார். முகாமில் தேனீவளர்ப்பு, காளான்வளர்ப்பு, மூலிகை பூட்சி விரட்டி, மீன்அமிலம் தயாரிப்பு, மண்புழுஉரம், காய்கறி, கீரைவகைகள் பயிரிடுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன.

இயற்கை விஞ்ஞானி திரு.நம்மாழ்வார் நேர்காணல்

நாம் நேர்காணல் செய்யவிருப்பவர் தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் முன்னணியில் இருப்பவர். ஆம் திரு.நம்மாழ்வார் அவர்கள். இவர் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை கற்றவர். கோவில்பட்டி மண்டலமழைப் பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியாற்றினார். பசுமைப்புரட்சி,  நிலச்சீர்திருத்தம்தொழில்மயமாக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வருபவர். தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்வானகம்” போன்ற அமைப்புகளைத் தொடங்கிதமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றுக்கும் கால்நடையாக சென்று அங்கு கருத்தரங்கங்களும்பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருபவர். இனி திரு. நம்மாழ்வார் அவர்களின் நேர்காணல்:-


சிறகு: தங்களது தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகம், வானகம் போன்ற அமைப்புகளின் தேவை, அவசியம் என்ன?
திரு.நம்மாழ்வார்: இயற்கை வேளாண்மை என்பது வாயால் சொல்லி மற்றவர்கள் புரிந்து கொள்வது கிடையாது. ஆங்காங்கே மாதிரிகளை உருவாக்க வேண்டும். அந்த மாதிரிகளை உருவாக்கும்போதே பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். யார் இந்தக் கல்வியுடன் இணைந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் செல்லும் இடமெல்லாம் இந்தத் தகவலை கொண்டு செல்ல வேண்டும்.  அதனால் ‘ அறிவினை விரிவு செய், அகண்டமாக்கு மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்று பாரதிதாசன் சொன்னார். அந்த அறிவை விரிவு செய்வதற்காக இவற்றை உருவாக்குகிறோம். இயற்கை வலியது. மிகப் பெரியது. தன் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளை அது தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும். ஆனால் புதிப்பிக்க முடியாத கட்டத்திற்கு போய்க் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் டன் நஞ்சை இந்திய மண்ணில் தூவி வருகிறார்கள். எனவே இதிலிருந்தெல்லாம் மக்களை மீட்டெடுக்க வேண்டும். இயற்கையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் மாதிரி நிலங்கள், புலங்கள் வேண்டும். அவைகளுக்காகத்தான் இவற்றை உருவாக்கினோம். நிலம், புலம் மட்டும் இல்லை மாதிரி சமூகமும் வேண்டும். இரண்டையும் இணைத்துத்தான் வானகம் என்று பெயர் வைத்திருக்கிறோம். தமிழின வாழ்வியல் பல்கலைக் கழகத்தை உருவாக்கினோம். இது இடையில் நிர்வாகிகள் குழப்பங்களால் நின்று போய்விட்டது. அதன் இறுதி வடிவமாகத்தான் வானகத்தைப் பார்க்கிறேன்.
சிறகு: இயற்கை வேளாண்மைக்கு வர விவசாயிகளுக்கு சில மனத் தடைகள் உள்ளன. குறிப்பாக நாம் மட்டும் இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட்டால் பூச்சிகளிடம் இருந்து பயிர்களைக் காப்பாற்ற முடியுமா? இரசாயன பூச்சி கொல்லிகள் உபயோகிக்கும் மற்றவர்கள் பயிர்களில் இருந்து நமது பயிருக்குப் பரவி விடாதா என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன. உங்களிடம் வரும் விவசாயிகள் எவ்வாறு நம்பிக்கை பெறுகிறார்கள்?
திரு.நம்மாழ்வார்: எப்போது வானகத்திற்கு வருகிறார்களோ அப்போதே நம்பிக்கை வந்துவிடும். ஏனென்றால் கண்ணுக்கு முன் பார்க்கிறார்கள். அதற்குள் எந்த இரசாயனமும் தெளிக்கவில்லை. ஆடு, மாடு தின்னாத செடி கொடிகளை துண்டு துண்டாக நசுக்கி மாட்டு மூத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். பத்து நாள் ஆனால் பிறகு பூச்சு விரட்டு தயார். தெளித்து விட்டோம் என்றால் சின்ன சின்ன பூச்சிகள் நம் செடியில் வந்து முட்டை போடும். சின்ன சின்ன தகவல்கள்கூட நம் விவசாயிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பூச்சிக்கு நான்கு பருவம் உண்டு. முட்டை, புழு, கூட்டுப் புழு, பூச்சி. தாய் பூச்சி மென்மையான இலைகளில் உட்கார்ந்து முட்டை போடுகிறது. ஏனென்றால் முட்டையில் இருந்து வரும் புழு மென்மையான இலைகளைத்தான் தின்ன முடியும். ஆகவே இலை மீது பூச்சு விரட்டியை தெளித்து விட்டால் வாசனைக்கு வேறுவிதமான பூச்சிகள் வந்து உட்காரும். இது முதல். இரண்டாவது, ஒரு செடியில் பத்து பூச்சி இருக்கின்றன என்றால் அந்தப் பூச்சிகளை தின்ன இருபது பூச்சிகள் இருக்கின்றன. நாம் விஷம் தெளிக்கும் நேரத்தில் இந்த இருபது பூச்சிகள்தான் முதலில் சாகும். மறுபடியும் அந்தப் பூச்சிகள் வரும்போது அதைத் தின்பதற்கு வேறு பூச்சிகள் இல்லை. இருநூறு வகை பறவைகள் பூச்சிகள் தின்னும். நீங்கள் எப்போது நஞ்சு தெளித்தீர்களோ பறவைகள் தோட்டத்துக்கு வருவது நின்று விடுகின்றது. இந்த உண்மைகளை எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. அதற்காகத்தான் வானகத்தை தொடங்கினோம். ஆனால் வானகத்திற்கு வராமல் எங்கேயோ இருந்துகொண்டு பொய்யையே கட்டி அழுது கொண்டிருக்கிறார்கள்.
சிறகு: பல ஆண்டுகளாக இயற்கை வேளாண்மை குறித்து பேசி வருகிறீர்கள். உங்கள் பணிக்கு வரவேற்பு எப்படி உள்ளது? வருத்தம் அளிப்பதாக இருக்கிறதா? மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறதா?
திரு.நம்மாழ்வார்: ஆரம்பக் கட்டத்தில் இந்தக் கிழவன் ஏதோ புலம்புகிறான் என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு அடுத்த கட்டம் வந்தது. ஆங்காங்கே விவசாயிகள் செய்ய ஆரம்பித்தார்கள். ஜப்பானில், ஆஸ்திரேலியாவில் செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. கரூரில், வையம்பட்டியில், கடவூர் ஆகிய ஊர்களில் விவசாயிகள் பூச்சி விரட்டியை வாங்கிக் கொண்டு போய் தெளித்து வருகிறார்கள். இன்றைக்கு அறிவு பெற்ற சமுதாயம் தகவல் தொழில் நுட்பத்தில் வேலைக்குப் போனவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் எல்லோரும் வருகிறார்கள். ஏனென்றால் உணவில் நிறைய நஞ்சு கலப்பதால் எங்கு பார்த்தாலும் நோயாளிகள் இருக்கிறார்கள். பிறக்கும் குழைந்தைக்கும் புற்று நோய் இருக்கிறது. இந்த அநீதி தொடரக்கூடாது என்பதற்காக நிறைய பேர் உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள். கற்றுக் கொண்டு போய் இருக்கிறார்கள். இது மகிழ்ச்சிக்குரியது.
சிறகு: மாணவர்களிடம் பேசுகிறீர்கள். அவர்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது? அடுத்த தலைமுறையினர் இதில் ஆர்வம் காட்டுவார்கள், பெரிய மாற்றம் உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?
திரு.நம்மாழ்வார்: ஆரம்பத்தில் மாணவர்களை தவிர்த்து வந்தேன். என்னுடைய இலக்கு விவசாயிகள்தான் என்பதால் தவிர்த்தேன். பின்னர் பார்த்தேன், விவசாயிகளுக்கு ஒரு பயம் இருக்கிறது. இப்போது வந்துகொண்டிருக்கும் விளைச்சலும் வராமல் போய்விடுமோ என்று. அதனால் மாணவர்கள் மத்தியில் இதை விதைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் வெவ்வேறு துறைக்குப் போனாலும் தன்னுடைய பங்கை ஆற்றுவார்கள். இளமையில் கல் என்று சொன்னார்கள். இளமையில் விதைக்கப்படும் விதை அது நீண்ட காலத்திற்கு வேலை செய்யும். அதனால்தான் மாணவர்கள் மத்தியில் எங்கு பேச அழைத்தாலும் போகிறேன். வரவேற்பு நன்றாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலம் இதில் பாதுகாக்கப்படுகிறது.
சிறகு: நூறு நாள் வேலைத் திட்டத்தில் – ஆந்திராவில் ஒரு மாவட்ட நிர்வாக அதிகாரி தன்னுடைய தனிப்பட்ட அக்கறையின் காரணமாக விவசாயிகள் தங்கள் நிலத்தில் மழை நீரை தேக்கி வைக்க குட்டைகள் வெட்டிக் கொள்ளலாம் என்று அனுமதித்ததாக நீங்கள் ஒரு முறை கூறினீர்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பறிக்கும் அரசு, மக்களுக்கு நிலத்தோடு இருக்கும் உறவை அறுத்தெறிகிறது. உங்கள் பார்வையில் நூறு நாள் வேலைத் திட்டம் எப்படி?
திரு.நம்மாழ்வார்: நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை எதுவும் நடக்கவில்லை. இதை நான் சொல்வதில்லை. நாடாளுமன்றத்தில் 543 பேர் இருக்கிறார்கள். அவர்களும் உட்கார்ந்து உட்கார்ந்துதான் எந்திறிக்கிறார்கள். அவர்கள் மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்கள். இவர்கள் மட்டும் உட்கார்ந்து எழுந்தால் என்ன தவறு? ஒரு நாளைக்கு நூறு ரூபாய்தானே கொடுக்கப் போகிறார்கள்? முப்பது நாளுக்கு மூன்றாயிரம்தானே. இதை வைத்து வருடத்திற்கும் சாப்பிட வேண்டும். இந்தத் திட்டத்தால் நல்லது நடக்கவில்லை. எங்கு தவறு நடக்கிறது என்றால் அரசியல் தளத்தில் இருக்கிறது. பெரிய வணிக அமைப்புகள் அரசுக்கு யோசனை வழங்குகிறது. என்னவென்றால், அமெரிக்காவில் ஒன்னரை விழுக்காடு மக்கள்தான் கிராமத்தில் வாழ்கிறார்கள். இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கிறார்கள். அமெரிக்கா போல் முன்னேற வேண்டுமானால் இங்கு அறுபது விழுக்காடு மக்கள் இருக்கக் கூடாது. முப்பது விழுக்காடு மக்களை குறைக்க வேண்டும் என்று சேம்பர் ஆப் காமர்ஸ் அரசுக்கு பரிந்துரை செய்து விட்டார்கள். அதை அடிப்படையாக வைத்துதான் அரசு திட்டம் போட்டு –உழவு சார்ந்தவர்களை உழவு உற்பத்திக்கே போகாதபடி பிய்த்து வெளியில் எடுக்கிறார்கள். இதனால் வேளாண் தொழில் தெரிந்த ஆட்கள் கிராமத்தில் இருக்க மாட்டார்கள். இப்போது அதுதான் நடக்கிறது. விவசாயி என்ன செய்கிறான்- நிலத்தை விற்று பணத்தை வங்கியில் போட்டு விட்டு  எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களை படிப்பு என்று சொல்லி வெளியில் இழுத்து விட்டார்கள். வேலை என்று கூறி திருப்பூருக்கோ சென்னைக்கோ இழுத்துவிட்டார்கள். பல பகுதிகளை பட்டணமாக்கி கிராமங்களை விழுங்கி கிராமத்தில் இருக்கும் மனிதன், மண், தண்ணீர் எல்லாவற்றையும் நாசம் செய்து விட்டார்கள். கிராமங்களை பட்டணங்களின் சாக்கடை ஆக்கிவிட்டார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் நூறு நாள் வேலைத் திட்டத்தை நான் பார்க்கிறேன். அந்தத் திட்டத்தை மகாத்மா காந்தி பெயரில் வைத்திருப்பது பெரிய கேலிக் கூத்து. மகாத்மா காந்தி, ‘பெருவித தொழில் உற்பத்தி தேவை இல்லை. பெருவாரியான மக்களால் உற்பத்தி நடக்க வேண்டும்’ என்று சொன்னார். அவர் பெயரிலேயே தொழில் தெரியாமல் மக்களை மாற்றும் போக்கு பெரிய நகைப்பிற்குரியது.
சிறகு: இயற்கை வேளாண்மைக்கு ஆதரவாக ஒரு கொள்கை முடிவை அரசை எடுக்க வைக்க ஏதேனும் திட்டம் உள்ளதா? இதற்கு என்னவிதமான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்?
திரு.நம்மாழ்வார்: இதற்குப் போராட்டமே தேவை இல்லை. தமிழ்நாட்டைப் பொருத்து சொல்கிறேன். ஆயிரம் பேருக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். 1000 நம்மாழ்வார்களை உருவாக்க வேண்டும். நூறு இடங்களில் பயிற்சி மையங்களை உருவாக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் அமைக்க வேண்டும். பெண்கள் வெகுதூரம் போவதில்லை. அவர்களுக்கு அருகிலேயே சென்று கற்றுக் கொண்டு திரும்பும் வகையில் பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும். இதை உருவாக்கினால் பொய்யை அவர்கள் புரிந்து கொள்வார்கள். ‘பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்கே செல்வமெல்லாம் உண்டு’ என்று பாரதி சொன்னான். அதுதான் இங்கு நடைபெறுகிறது. எனவே பொய்யைத் தொழுவதை விட்டு விட்டு உண்மையை தேடி வாருங்கள் என்று சொன்னால் மக்கள் மாறுவார்கள். மக்கள் மாறினால் அரசாங்கம் மாறியே தீர வேண்டும். மக்களை மாற்றாமல் அரசை மாற்ற நினைத்து செய்யும் செயல்கள் ஒன்றும் பயன்படாது.
சிறகு: வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட விரும்புகிறார்கள். அவ்வாறு விரும்பும் இன்றைய தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனை என்ன?
திரு.நம்மாழ்வார்: அமெரிக்கா போன நிறைய பேர் திரும்பி விட்டார்கள். அங்கு வாழ்க்கை இல்லை. நாங்கள் வாழவேண்டும் என்று நினைக்கிறோம். வெறும் சம்பாத்தியம் மட்டுமே வாழ்க்கை இல்லை. எங்கள் கையில் கொஞ்சம் பணம் இருக்கிறது. நிலம் கொஞ்சம் மலிவாகக் கிடைக்குமா என்று கேட்கிறார்கள். இதில் நாம் ஆய்வு நடத்த வேண்டும். இப்போது தீவிரமான சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் அறுபது சதம் மக்கள் கிராமங்களில் வாழ்கிறார்கள். அதனால் கிராமத்தை வாழத் தகுந்ததாக மாற்ற வேண்டும். இப்போது பருவ மழை இல்லை, ஆனால் வெள்ளம் வருகிறது. வெள்ளம் வரும்போது கடலில் எப்படி அதை வடிப்பது என்று சிந்திக்கிறார்களே தவிர தண்ணீரை தேக்குவதைப் பற்றி யோசிக்கவில்லை. அரசர்கள் தன் பிறந்த நாளுக்கு ஏரி வெட்டினார்கள், வென்ற நாளுக்கு ஏரி வெட்டினார்கள். இராமநாதபுரத்தில் நாரை பறக்காத நாற்பத்தி மூன்று கண்மாய் ஏரி இருக்கிறது. அதை ராஜசிம்மன் என்ற மன்னன் வெட்டி இருக்கிறான். அது இப்போது வண்டல் படிந்து மேடாக தண்ணீர் இல்லாத இடமாக இருக்கிறது. பொதுப்பணித் துறை அதை ஆழப்படுத்தும் வேலையை செய்யவில்லை. மாடுகள் இன்று கசாப்பு கடைகளுக்கு போகிறது. மாடுகளை படுக்க வைத்து எழுப்பினால் அங்கு எந்த பயிரும் விளையும். கிராமத்தை அறிவுமிக்கதாகவும் வளம் மிக்கதாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் பண்ணை சேவை மையம் இருக்கவேண்டும். அதில் விவசாயிகள் பயன்படுத்தும் கருவிகள் இருக்க வேண்டும். கிராமப் பள்ளிகளை வசதி இல்லாமல் ஆக்கிவிட்டு பட்டணத்திற்கு அனுப்புகிறார்கள். உன் கிராமம் உருப்படாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தை வலுவாக்கி பள்ளியைச் சுற்றி மரங்கள் வளர்த்து பள்ளிக்குத் தேவையான உணவை உற்பத்தி செய்யும் வேலையில் இறங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும். வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்கவேண்டும், பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும், ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும், குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும், பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும், ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும்., அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும், ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும். வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும். இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள். அரசு சலுகை வழங்குவது மக்களுக்கு சென்று சேர்வதில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு தகவல் மையம் இருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் அங்கு போய் உங்களுக்கு என்னென்ன வேண்டும் என்று சொல்ல வேண்டும். ஒரு குளம் கட்டிவிட்டு சுற்றி யாரும் காலை வைத்து இறங்காமல் பார்த்துக் கொண்டால் குடி நீர் பஞ்சத்தை ஒழித்து விடலாம். ஏரிக்கரைகளில் மரங்களை நடவேண்டும். அது ஆடு மாடுகளுக்கு தீவனம் ஆகும். அதில் குதிரை சவாரி செய்யலாம், குளத்தில் மீன் வளர்க்கலாம், படகு விடலாம். பட்டணத்தில் இருப்பவன் கிராமத்துக்கு வருவான். அப்படி கிராமங்களை உருவாக்குவது பற்றி நண்பர்களிடம் சொல்லி இருக்கிறேன். நண்பர்களிடம் ஒப்புதலும் வந்துவிட்டது. இதற்கு ஆயிரம் தொண்டர்கள் தேவை. எந்த இடத்தில் வேலை துவங்கினாலும் மண்வெட்டி கூடையுடன் வரத் தயாராக இருக்கவேண்டும். இதுபோன்ற ஆட்களை தேடி வருகிறேன். இதில் வெளிநாட்டு நண்பர்களும் வந்து இணைவார்கள் என்று நம்புகிறேன்.
சிறகு: விதைகளே பேராயுதம் என்கிறீர்கள். நாம் இழந்த பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்க முடியுமா?
திரு.நம்மாழ்வார்: வெள்ளைக்காரன் நம் நாட்டை விட்டுப் போகும்போது இந்தியாவில் இருந்த நெல் ரகங்கள் முப்பது ஆயிரம். எல்லா ஆவணங்களும் இதை பதிவு செய்திருக்கிறது. கேரளத்தினர் இருநூறு வகை பாரம்பரிய நெல் விதைகளை கண்டுபிடித்து எடுத்து விட்டார்கள். தமிழ்நாட்டில் அறுபத்து மூன்று நெல் விதைகளை கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டுபிடித்து சேர்த்தால் நூறு ஆகும். நூறு என்பதே பெரிய வெற்றிதான். பாரம்பரிய நெல்லின் சிறப்பு என்னவென்றால் பூச்சி, நோய் தாக்குவதில்லை, ரசாயன உரம் வேண்டியதில்லை. வங்கியில் கடன் வாங்க வேண்டியதில்லை, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்யவேண்டியதில்லை என்று நிறைய சாதகங்கள் உள்ளன. எனவேதான் விதையை பேராயுதமாக பயன்படுத்த வேண்டும் என்றோம். காய்கறி விதைகளில் போதிய அளவு நாம் வேலைகள் செய்யவில்லை. நண்பர்களிடம்- அடுத்த தை மாதத்திற்குள் எங்கு பார்த்தாலும் உழவர்களின் காய்கறி விதைகள் இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். நடக்கும் என்று நம்புகிறேன்.
சிறகு: வானகத்தில் சேர்ந்து பணியாற்ற விரும்புபவர்கள் தங்களை இணைத்துக் கொள்வது எப்படி?
திரு.நம்மாழ்வார்: வானகம் ஒரு அறக்கட்டளை. வானகத்தைத் தாண்டி ஒரு வளையம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆலோசனை வளையம் போல் வரும். இதில் எல்லோரும் இணையலாம்.
சிறகு: உங்கள் முயற்சிக்கு வாழத்துக்கள் ஐயா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் இதைக் கேட்டு பயனடைவார்கள் என்று நம்புகிறோம்.
திரு.நம்மாழ்வார்: ஒரு தகவல் சொல்ல வேண்டும். எனக்கு ஒரு நினைவு இருக்கிறது. இந்த பூமியில் எந்த மூலைமுடுக்கில் இருந்தாலும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் அவர்கள் பெயரைப் போட்டு ஒரு மரம் வளர்க்க வேண்டும். இதனால் அவர்கள் வானகத்தில் என்னுடைய பங்கு இருக்கிறது என்று நினைக்கலாம். மனதாலோ உடலாலோ நோய் பட்டால் இங்கு வரலாம் தங்கலாம். இதுபோன்ற ஒரு சாந்தி வனத்தை உருவாக்கும் எண்ணம் என்னுள் இருக்கிறது.

சிறகு சிறப்பு நிருபர் 

http://siragu.com/?p=4047