Monday, August 26, 2013

பூச்சி மருந்துகளால் பேராபத்து: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் எச்சரிக்கை

“”பயிர்களை பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகள் உள்ள நிலையில், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட, பூச்சிகளை அழிக்கும் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதால், மக்கள் கொடிய நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்,” என, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.

தமிழக விவசாயிகள் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க, ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளையே பயன்படுத்துகின்றனர். அதன் மூலம் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர்.
இதுகுறித்து இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறியதாவது:
  • தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் கத்தரி, தக்காளி, வெண்டை என, அனைத்து தோட்டக் கலை பயிர்கள் மற்றும் நெல் பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க என்டோசல்பான், மானோகுரோட்டம்பாஸ், எக்காளாக்ஸ் போன்ற ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
  • கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், அரசுக்கு சொந்தமான, 12 ஆயிரத்து 500 ஏக்கர் முந்திரி தோட்டம் இருந்தது. இதில், பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, ஹெலிகாப்டர் மூலம் என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கப்பட்டது. அந்த மருந்து காற்றின் மூலம், சுற்றுப் பகுதியில் உள்ள 25 கிராமங்களுக்கு பரவியது. பூச்சிக்கொல்லி மருந்தை சுவாசித்த ஏராளமானோர் இறந்தனர். பொதுமக்கள் பலர் தோல் நோய், புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில் குறை பிரசவ குழந்தைகள் அதிகம் பிறக்கிறது. இந்த பாதிப்பு பல தலைமுறைக்கும் தொடரும். அதனால், கேரளா அரசு என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்துக்கு, நாடு முழுவதும் தடை விதிக்க போராடுகிறது.
  • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இயற்கை ஆர்வலர்களும், பூச்சிக்கொல்லி மருந்துக்கு தடைவிதிக்க கோரி, சுற்றுச்சூழல் அமைச்சர்  கோரிக்கை விடுத்துள்ளனர்.
  • தற்போது, 72 நாடுகளில் தடை விதிக்கப்பட்ட, 17 வகை உள்ளிட்ட, 140 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள், இந்தியாவில் பயன்படுத்துப்படுகின்றன.
  • மற்ற நாடுகள் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், மக்கள் குறித்து கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாக கொண்டு, இந்தியாவில் ஒரு குழுவினர் வெளிநாட்டு பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு சாதகமான செயல்படுகின்றனர்.
  • பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தேனீக்கள், சிறு பூச்சிகள், பறவைகள் என, அனைத்துமே அழிகின்றன.
  • வேப்பிலை, நொச்சி, சோற்று கற்றாலை, எருக்கு, ஊமத்தை போன்றவை இயற்கையான பூச்சி விரட்டி மருந்துகளாகும். அதை காய்கறி தோட்டத்தில் பயன்படுத்துவதால், பூச்சிகளை விரட்டி அடிக்கப்படும். அவைகள் அழிந்து போகாது. சுற்றுச்சூழலும் பாதிக்காது.
  • மனிதர்களையும் கொடிய நோய் தாக்காது. தடை செய்யப்பட்ட பூச்சி மருந்துகளை பயன்படுத்துவது தொடருமானால், வருங்காலத்தில் கொடிய நோய்களால் பாதிப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
இவ்வாறு நம்மாழ்வார் கூறினார்.
நன்றி: தினமலர் 

No comments: