Monday, August 26, 2013

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்

பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளை விவசாயிகள் பயன்படுத்தக் கூடாது என இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் வலியுறுத்தினார்.
 சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில், "உழவுக்கும் உயிர் உண்டு' என்ற தலைப்பில் இயற்கை வேளாண் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. மேலாண்மை துறையைச் சேர்ந்த தளிர் மாணவர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இந்தக் கருத்தரங்கில், இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசியது:
 இயற்கையைவிட்டு நீண்ட தொலைவுக்கு நாம் விலகி வந்துள்ளோம். இதனால்தான், உணவு முறைகளைக் கொண்டு சரி செய்யக் கூடிய நீரிழிவு நோய்க்கு பன்னாட்டு மருந்துகளை வாங்கி தீர்வு காண முயல்கிறோம்.
 இயற்கையைவிட்டு நாம் விலகியதால்தான், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அனைத்து பிரச்னைகளுக்கும் இயற்கையை அணுகினால், தீர்வு எளிதாகக் கிடைக்கும். தமிழகத்தில் 31 மாவட்டங்களில் வறட்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. "நீரின்றி அமையாது உலகு' என்ற தத்துவத்தை நாம் கடைப்பிடிக்காததன் காரணமே இந்த விளைவுகள். 
 நம் முன்னோர்கள் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய பள்ளமான இடங்களில் ஏரிகளை அமைத்தனர். தற்போது, ஏரிகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இயற்கை நமக்காக தொண்டு செய்யும் போது, ரசாயன உரங்கள் நமக்கு தேவையில்லை.
 உரங்களால் நிலத்தின் வளம் பாதிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளில், 2.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இதற்கு கருத்துத் தெரிவித்த திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, பன்னாட்டு நிறுவனங்கள் நமது நாட்டில் விவசாயம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றார்.
 பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விவசாயம் சென்று விட்டால், உணவுக்கு பஞ்சம் ஏற்படுவது உறுதி. பன்னாட்டு நிறுவனங்கள் விதையில் விஷத்தை கலந்து தருகின்றன. அதனால்தான், இயற்கை விவசாயம் அழிந்து வருகிறது. 
 இயற்கை விவசாயம் வளர வேண்டுமானால், வேளாண் உற்பத்தி விதைகள் விவசாயிகளின் கையில் இருக்க வேண்டும். மாறாக, பன்னாட்டு நிறுவனங்களின் கையில் இருக்கக் கூடாது. விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களின் விதைகளைப் பயன்படுத்தக் கூடாது என்றார் நம்மாழ்வார்.
 கருத்தரங்கில் சோனா கல்லூரியின் மேலாண்மைத் துறைத் தலைவர் லதா கிருஷ்ணன், நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் ராஜா, தளிர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரியாஸ் அஹமது மற்றும் மாணவ, மாணவிகள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


http://dinamani.com/edition_dharmapuri/salem/2013/04/25/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/article1560991.ece

No comments: