Monday, August 26, 2013

இந்தியாவில் உணவு நஞ்சாகி விட்டது - இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அதிர்ச்சி தகவல்

கரூர்: ""இந்தியாவில் பசுமைபுரட்சி என்ற பெயரில் ரசயான உரங்களால் உணவு நஞ்சாகி மாறி விட்டது,'' என்று இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
கரூர் - வாங்கல் சாலையில் உள்ள அருட்பெருஞ்சோதி கல்வி அறக்கட்டளை வளாகத்தில் "நஞ்சில்லா உணவு' விற்பனை மையத்தை, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் துவக்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது: பசுமை புரட்சி என்ற பெயரில் ரசயான உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி நமது உணவு நஞ்சாகிவிட்டது. எண்டோசல்பான், மனித உயிர்களுக்கு எமன் என்பதால் உலகம் முழுவதும் எண்டோசல்பானுக்கு தடை விதிக்க போராட்டங்கள் நடந்தது. பல நாடுகள் இதற்கு தடைவிதித்துள்ளது. "மா ண்சாண்டோ' அறிமுகப்படுத்தியுள்ள மரபணு மாற்றப் பயிர்கள் மனித குலத்தை அழிக்கவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மரபணு மாற்றப்பயிர்கள் மூலம் நாடுகளை அடிமைப்படுத்தவே வியாபார நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றன. இதற்கு விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நமது பாரம்பரிய உணவு வகைகளை, விதைகளை அழித்து, டப்பாவில் அடைத்து நஞ்சு கலந்த உணவை திணிக்க திட்டமிட்டுள்ளன. இந்த உணவுகள் கெட்டுபோகாமல் இருக்க ரசாயனம் கலக்கப்படுகிறது. இந்த உண்மையை உணர்ந்து நமது உணவு பழக்கத்தை கைவிடாது நஞ்சில்லா உணவை உண்டு நல்ல ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
"பாரதிதாசன் பல்கலையின் இயற்கை வழி வேளாண்மை படிப்பில் பயின்ற 60 உழவர்கள், இயற்கை வழியில் விளைவிக்கின்ற உணவுப் பொருட்களை இந்த மையத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். "அஜினோமோட்டோ' கலந்த நொறுக்கு தீனிகளை மாணவர்கள் கைவிட வேண்டும் என்பதற்காக மெல்லுணவு அங்காடி இயங்கி வருகிறது. இயற்கை வழி வேளாண்மைச் சான்றிதழ் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது' என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குமர நித்தியானந்த சோதி தெரிவித்தார்.

No comments: