Monday, August 26, 2013

பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு காரணம்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

             பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு முக்கிய காரணம் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
 ÷கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், "பாரம்பரியம் போற்றுவோம்' என்ற தலைப்பில் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நம்மாழ்வார் பேசியது:
 ÷இன்றைய சூழலில் விஞ்ஞானம் என்ற பெயரில், நமது இயற்கை வளங்களை அழித்து வாணிபம் நன்றாக வளர்ந்துள்ளது. உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் பொருளாக இருந்தாலும் காசு கொடுத்து வாங்கி விட்டோமே என்று பயன்படுத்துகிறோம். பச்சைக் காய்கறிகளை தவிர்த்து, வேக வைத்த செத்தவற்றை சாப்பிடுகிறோம்.
 ÷பதற்ற சூழ்நிலைகளே ஆரோக்கியமற்ற வாழ்வுக்கு முக்கிய காரணம். உடலில் ஏற்படும் வலி ஒரு நோயல்ல; உடல் தனது நிலையை குணப்படுத்த எடுக்கும் முயற்சியே அது. நல்ல உடல் நலத்தைப் பேண நான்கு வழிகள் உள்ளன. பசி வந்தால் மட்டும் சாப்பிடுங்கள்; தாகம் வரும்போதெல்லாம் தண்ணீர் குடியுங்கள்; சோர்வு வந்தால் படுத்துவிடுங்கள்; தூக்கம் வந்தால் தூங்கிவிடுங்கள். அந்த நேரத்தில்தான் உடல் தன்னை தயார் செய்து கொள்ளும்.
 ÷இப்போது விஞ்ஞானம் முன்னேறிவிட்டது என்கிறார்கள். அப்படியிருந்தால் ஏன் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒளவையார் கூறியுள்ளார். நோய் வந்துவிட்டாலே செல்வம் போய் விட்டதே.
 ÷திருப்பூரிலிருந்து ஒரத்துப்பாளையம் அணை வரை நொய்யல் ஆற்றங்கரையில் 33 கி.மீ. தூரத்துக்கு சாயப்பட்டறைகளால் குடிநீர் சாக்கடையாக மாறியுள்ளது. வழியில் உள்ள அனைத்துக் கிணறுகளும் சாக்கடைகளாக மாறியுள்ளன. அனைத்தும் நமது செயல்.
 ÷நமது மூதாதையர்களின் ஞானத்துக்கு ஈடு, இணை இல்லை. அவற்றைப் பின்பற்றுங்கள்.
 இலங்கையில் மனித உயிர்கள் கொல்லப்பட்டதற்கு தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களால் நாடு உயிர்த் துடிப்போடு உள்ளது என்பதை உணர முடிகிறது. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றார்.


http://dinamani.com/agriculture/article1510562.ece

No comments: