ராமநாதபுரம்,
இயற்கை விவசாய காய்கறிகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.
பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் குறித்து 2நாட்கள் பயிற்சி முகாம் போகலூர் யூனியன் எட்டிவயல் கிராமத்தில் உள்ள விவசாய பண்ணையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:–
சூரியனின் வெளிச்சம் இலைகளின் மீது படுவதால் இலைகளுக்கு உணவு கிடைக்கிறது. இதனால் வெப்பம் மீண்டும் வானத்துக்கு செல்வதில்லை. மக்கள் மரம் செடிகளை அதிகம் வளர்க்க வேண்டும். அடுத்த தலைமுறையினர் நன்றாக வாழ்வதற்கு இயற்கை விவசாயம் செய்யவேண்டும். உரங்களை போட்டு பயிர்களை வளர்ப்பதில் எந்த சத்தும் கிடைப்பதில்லை. மாறாக நோய்கள் தான் உருவாகின்றன. இதனால் புதிய ஆஸ்பத்திரிகள், மருந்துகடைகள் தோன்றுகின்றன.
மூலிகை செடிகள்
இயற்கை விவசாயத்தின் மூலம் விளையும் காய்கறிகளில் சத்துகள் நிறைந்துள்ளன. இந்த முறை மூலம் முட்டைக்கோஸ் பயிரிட்டால் அவற்றை சமைக்க வேண்டியதில்லை. அப்படியே பச்சையாக சாப்பிடலாம். அந்த அளவுக்கு சுவையாக இருக்கும்.
இந்தியாவில் 90 ஆயிரம் வகையிலான தாவரங்கள் மருந்தாக பயன்படுகின்றன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் மூலிகை செடிகளை வளர்க்கவேண்டும். அந்த செடிகளின் பயன்கள் குறித்து மாணவ–மாணவிகளுக்கு விளக்கி கூறவேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு சாப்பிட்ட உணவுகளை நாம் இன்று சாப்பிடுவதில்லை. விரைவாக சமைத்து விரைவாக சாப்பிடவேண்டும் என்று விஷத்தை சாப்பிட்டு வருகிறோம். இதனால் நோய்கள் தான் உருவாகி வருகின்றன. காற்றும், தண்ணீரும் பூமியில் சமநிலையில் இருந்தால்தான் மரங்கள் செடிகள் நன்றாக வளரும்.
இவ்வாறு அவர் பேசினார். முகாமில் தேனீவளர்ப்பு, காளான்வளர்ப்பு, மூலிகை பூட்சி விரட்டி, மீன்அமிலம் தயாரிப்பு, மண்புழுஉரம், காய்கறி, கீரைவகைகள் பயிரிடுதல், ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் போன்ற பல்வேறு பயிற்சிகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன.
No comments:
Post a Comment