Monday, August 26, 2013

நாற்பது நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது!


நாற்பது நாடுகளில் உணவுக்காக கலவரம் நடக்கிறது!
 இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பேச்சு!

புதுக்கோட்டையை அடுத்த வாகைப்பட்டி கிராமத்தில் அன்பழகன் இயற்கை விவசாய பண்ணையில் ரோஸ் நிறுவனம் நபார்டு வங்கியுடன் இணைந்து பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைத் திருவிழா நடத்தியது. 
மக்கள் மத்தியில் அழிந்துவிட்ட பாரம்பரிய நெல் இரகங்களை மீண்டும் சாகுபடி செய்து, இக்கால விவசாயிகள் மத்தியல் அறிமுப்படுத்துவதே இப்புதுமைப் பண்ணை திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். சிறப்புரையாற்றிய இயற்கை வேளாண் விஞ்ஞானி முனைவர்.நம்மாழ்வார், 
உலகில் உள்ள நாற்பது நாடுகளில், இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா.சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார். உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத்தீவனமாக மாற்றப்படுகிறது. கோதுமை, சோயாமொச்சை, மக்காச்சோளம், கரும்பு போன்றவை டீசலாக மாற்றப்படுகின்றன. உலகில் வாழும் மக்களில் பாதிப்பேருக்கு உணவுக்கு உத்திரவாதம் இல்லை.

நம்முடைய முன்னோர்கள் எதிர்ப்பு சக்தி மிக்க, வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்களையும், சிறுதானியங்களையும் பயிரிட்டு நோயில்லா வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்;. ஆனால் அவைகளெல்லாம் காலப்போக்கில் அழிக்கப்பட்டுவிட்டன. நோயில்லா வாழ்வு வாழ நாம் மீண்டும் பாரம்பரிய விவசாயத்திற்கு திரும்ப வேண்டும் என்றும் குழந்தைகளின் சத்துக்குறைபாட்டை போக்குவதற்கு வீட்டிற்று ஒரு பேரிச்சை மரம் வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதைத் திருவிழாவில் அன்னவாசல், குண்ணன்டார்கோவில், பொன்னமராவதி, அரிமழம், திருமயம், மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய ஒன்றியங்களிலிருந்து வந்திருந்த 350 விவசாயிகள் வந்திருந்தனர்.  கைவரைச்சம்பா, மிளகி, இலுப்பைப்பூசம்பா, செம்புளிச்சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, கருடன்சம்பா, பனங்காட்டு குடவாழை, சிவப்பு கவுனி, கருங்குறுவை, கருத்தக்கார், சண்டிகார், குறுவைக்களஞ்சியம், தங்கச்சம்பா போன்ற பாரம்பாரிய நெல் இரகங்களும், வரகு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை மற்றும் திணை போன்ற சிறுதானிய இரகங்களும் 350 விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது.

தற்போது உலகத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கும் புவி வெப்பமயமாதலை குறைப்பது இப்பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய ரகங்கள். பாரம்பரிய நெல் ரகங்களும், சிறுதானியங்களும் வறட்சியையும், வெள்ளத்தையும் பூச்சி நோய் தாக்குதலையும தாங்கி வளரக்கூடியது. இவை மண்வளம், பூச்சி வளம், நீர் வளம், நம் உடல் வளம் ஆகியவற்றை காக்கவல்லது.; கால்நடைகளின் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய வல்லது.  இந்தியாவை அச்சுறுத்தி கொண்டிருக்கும், குழந்தைகள் சத்துக்குறைபாடை குறைப்பதற்கு மிகச் சிறந்த மாற்று நம் சிறுதானியங்களும் பாரம்பரிய நெல் ரகங்களுமே. 

இவ்வனைத்து பாரம்பரிய நெல் ரகங்களும், விவசாயிகள் மத்தியில் பரவலாக்கப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் மக்களால் உட்கொள்ளப்பட்டால், மனிதனின் உடல் ஆரோக்கிய நிலையில் பெருமளவு மாற்றங்கள் ஏற்ப்பட்டு சத்துக்குறைபாடு நீக்கப்பட்டுவதோடு மட்டுமல்லாது உயிர்பன்மயச்சூழலை ஏற்ப்படுத்தும் என்பதில் ஐயமில்லை என்று பாரம்பரிய நெல் மற்றும் சிறுதானிய விதை திருவிழாவில வலியுறுத்தப்பட்டது.

ஜெயராமன், சத்தியசீலன், அப்பாவு பாலாண்டார், தனபதி, வீராண்டான், அன்பழகன், ஜீவானந்தம், பாலகிருஷ்ணன், ஆதப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள். ரோஸ் நிறுவன திட்டப்பொறுப்பாளர் அகிலா வரவேற்றார், விஜயா நன்றி கூறினார். 

இரா.பகத்சிங்.

No comments: