Saturday, July 17, 2010

ஜூலை 17 - வரலாற்றில் இன்று

நிகழ்வுகள்

1203 - நான்காம் சிலுவைப் படைகள் கொன்ஸ்டண்டீனபோல் நகரைத் தாக்கிக் கைப்பற்றினர். பைசண்டைன் பேரரசர் மூன்றாம் அலெக்சியஸ் ஆஞ்செலஸ் தலைநகரை விட்டுத் தப்பியோடினான்.

1755 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்குலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.

1762 - ரஷ்யாவின் மூன்றாம் பீட்டர் கொல்லப்பட்டதை அடுத்து அவனது மனைவி இரண்டாம் கத்தரீன் அரசியானாள்.

1771 - இங்கிலாந்தின் சாமுவேல் ஹேர்னுடன் பயணித்த கனடாவின் சிப்பேவியன் பழங்குடிகளின் தலைவன் இனூயிட் மக்களின் ஒரு கூட்டத்தை நுனாவுட்டில் படுகொலை செய்தான்.

1791 - பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் போது பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1815 - பிரான்சில் நெப்போலியன் பொனபார்ட் பிரித்தானியர்களிடம் சரணடைந்தான்.

1816 - பிரெஞ்சு பயணிகள் கப்பல் செனெகல்லுக்கு அருகில் மூழ்கியதில் 140 பேர் கொல்லப்பட்டனர்.

1841 - முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது.

1856 - பென்சில்வேனியாவில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 60 பேர் கொல்லப்பட்டனர்.

1911 - யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டத்தின் திருமண விதிகளுக்கு மாற்றாக "யாழ்ப்பாண திருமண சிறப்புச் சட்டம்" கொண்டுவரப்பட்டது.

1918 - போல்ஷெவிக் கட்சியின் உத்தரவின் பேரில் ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாசும் அவனது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர்.

1918 - டைட்டானிக் கப்பலில் இருந்து 705 பேரைக் காப்பாற்றிய "கர்பாத்தியா" என்ற கப்பல் அயர்லாந்துக்கருகில் மூழ்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

1936 - ஸ்பானிய உள்நாட்டுப் போர்: ஸ்பெயினில் அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி அரசுக்கெதிராக இராணுவக் கிளர்ச்சி ஆரம்பமாகியது.

1944 - இரண்டாம் உலகப் போர்: கலிபோர்னியாவில் ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் வெடித்ததில் 320 பேர் கொல்லப்பட்டனர்.

1944 - இரண்டாம் உலகப் போர்: முதற் தடவையாக நேப்பாம் குண்டுகள் அமெரிக்காவினால் பிரான்ஸ் மீது போடப்பட்டது.

1945 - இரண்டாம் உலகப் போர்: அமெரிக்காவின் ஹாரி எஸ். ட்ரூமன், பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில், சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் உலகப்போர் தொடர்பான தமது கடைசி உச்சி மாநாட்டை ஜெர்மனியின் பொட்ஸ்டாம் நகரில் ஆரம்பித்தனர்.

1955 - கலிபோர்னியாவில் டிஸ்னிலாண்ட்டின் ஆரம்ப நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது.

1967 - நாசாவின் சேர்வயர் 4 ஆளில்லா விண்கலம் சந்திரனில் "சைனஸ் மெடை" என்ற இடத்தில் மோதியது.

1968 - ஈராக்கில் இடம்பெற்ற புரட்சியில் அதிபர் அப்துல் ரகுமான் ஆரிஃப் பதவியில் இருந்து அகற்றப்பட்டு அகமது ஹசன் அல்-பாக்கர் அதிபரானார்.

1973 - ஆப்கானிஸ்தான் அரசர் முகமது சாகிர் ஷா கண் சிகிச்சைக்காக இத்தாலி சென்றிருந்த போது பதவியில் இருந்து அகற்றப்பட்டு அவரது உறவினர் முகமது தாவுத் கான் மன்னரானார்.

1975 - அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலமும் சோவியத்தின் சோயுஸ் விண்கலமும் விண்வெளியில் ஒன்றாக இணைந்தன. இரண்டு நாடுகளின் விண்கலங்கள் ஒன்றாக இணைந்தது இதுவே முதற் தடவையாகும்.

1976 - கனடாவின் மொண்ட்ரியால் நகரில் கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. நியூசிலாந்து அணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 25 ஆபிரிக்க நாடுகள் இப்போட்டிகளைப் புறக்கணித்தன.

1976 - கிழக்குத் தீமோர் இந்தோனீசியாவுடன் இணைக்கப்பட்டது.

1979 - நிக்கராகுவா அதிபர் அனஸ்தாசியோ சமோசா டெபாயில் பதவியில் இருந்து விலகி மயாமிக்குத் தப்பி ஓடினார்.

1981 - மிசூரியில் கன்சாஸ் நகரில் நடைப் பாலம் ஒன்று இடிந்ததில் 114 பேர் கொல்லப்பட்டனர்.

1994 - பிரேசில் இத்தாலியை 3-2 என்ற பெனால்டி அடிப்படையில் வென்று உலக உதைபந்து உலகக்கிண்ணத்தை வென்றது.

1996 - நியூ யோர்க்கில் லோங் தீவில் பாரிஸ் சென்றுகொண்டிருந்த போயிங் 747 TWA விமானம் வெடித்துச் சிதறியதில் 230 பேர் கொல்லப்பட்டனர்.

1998 - பப்புவா நியூ கினியில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 10 கிராமங்கள் அழிந்தன. 3,183 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1998 - பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை நிரந்தரமாக அமைப்பதற்கான உடன்பாடு ரோம் நகரில் எட்டப்பட்டது.

2006 - இந்தோனீசியா, ஜாவாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

2006 - இந்தியா சத்தீஸ்கர் மாநிலத்தில் தந்தேவாடா மாவட்டத்தில் எர்ராபோரே நிவாரண முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

2007 - பிரேசிலில் விமானம் ஒன்று தரையில் மோதியதில் 199 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்
1941 - பாரதிராஜா, இந்தியத் திரைப்பட இயக்குனர்

1954 - ஏங்கலா மெர்கல், ஜெர்மனி நாட்டு அரசியல்வாதி

1971 - சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)

1977 - மாதங்கி அருள்பிரகாசம், ராப் இசைப் பாடகி

இறப்புகள்

1918 - ரசியாவின் மன்னர் இரண்டாம் நிக்கலாஸ் (பி. 1868) குடும்பம்
அலெக்சான்ட்ரா ஃபியோதரொவ்னா, அரசி (பி. 1872)
ஒல்கா, இளவரசி (பி. 1895)
தத்தியானா, இளவரசி (பி. 1897)
மரீயா, இளவரசி (பி. 1899)
அனஸ்தாசியா, இளவரசன் (பி. 1901)
அலெக்சி, இளவரசன் (பி. 1904)

1972 - எமிலியானுஸ் பிள்ளை, யாழ்ப்பாணத்தின் முதலாவது தமிழ் ஆயர், (பி. 1901)

சிறப்பு நாள்

தென் கொரியா - அரசியலமைப்பு நாள்

வாஞ்சிநாதன் இறப்பு
"ஆங்கில சத்ருக்கள் நமது தேசத்தை பிடுங்கி கொண்டு அழியாத சனாதன தர்மத்தைக் காலால் மிதித்து துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேச சத்ருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தித் தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான். எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குறு கோவிந்தன், அர்ஜூன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில் எருது மாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சயனை முடிசூட்ட உத்தேசம் செய்து கொண்டு பெருமுயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொள்ளும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதை தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை."

இப்படிக்கு
ஆர்.வாஞ்சி அய்யர், செங்கோட்டை

நெல்லை மாவட்ட பொறுப்பு ஆட்சியர் ராபர்ட் வில்லியம் டி எஸ்கார்ட் ஆசுவை, அவர் பயணம் செய்த தொடர்வண்டிப் பெட்டியில் ஏறி கைத்துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தி, தன்னைத்தானே சுட்டு சாவை தழுவிய வாஞ்சியின் சட்டை பையில் இருந்த மடல் தான் இது.

வாஞ்சி அன்றைய திருவிதாங்கூர் அரசை சார்ந்த செங்கோட்டையில் கோயில் ஒன்றில் மேற்காநிப்பு வேலை செய்து வந்த ரகுபதி என்பவரின் மகன் ஆவார். நான்கு பெண்களும், ஓர் ஆணும் இவரது உடன் பிறந்தோர் ஆவர். தனது ௨௩ ஆவது வயதில் போன்னம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

காளி படத்திற்கு முன்னாள் குங்குமநீரை கையிலெடுத்து வெள்ளைக்காரர்களின் இரத்தத்தைக் குடிப்பதாகச் சொல்லிப் பருகும் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு "பாரத மாத சங்கம்" ஆகும். எதிர் பாரத இடரில் இவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிக்கிகொண்டால் எதிரிக்கு தங்கள் முழுமையான திட்டங்கள் தெரியாமலிருக்க தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்ற கட்டுபாட்டை ஏற்று, வாஞ்சியும் அதன் உறுப்பினர் ஆனார். இவருடைய இந்த வாழ்க்கை முறையின் வெளிப்பாடாக இவரது சாவு அமைகிறது.

"தனி ஆள் படுகொலை இயக்கமானது அதிகாரவர்க்கத்தை நிலைகுலையச் செய்யவும், மக்கள் எழுச்சி பெறவும் உதவும் சிறந்த வழிமுறையாகும். தனி ஆள் படுகொலையின் மூலமாக புரட்சியின் தொடக்க நிலை அமையும்" என்ற சாவர்க்கரின் அறிவுரையை ஏற்று வாஞ்சி ஆசு என்பவரை கொன்றார்.

விவேகானந்தர், அரவிந்தர் ஆகியோரின் மத உணர்வு கலந்த ஆங்கிலேயர் எதிர்ப்புச் சிந்தனைகள் வஞ்சியை செயல்படத் தூண்டின.

வ.உ.சிதம்பரனாரின் தன்நாட்டு நீராவி கப்பல் நிறுவனத்தை அழித்தொழிக்க முயற்சி செய்தவர் ஆசு. வெள்ளைக்காரர்கள் மட்டும் குளிப்பதற்காக வேறு எவரும் குற்றால அருவியில் குளிக்கக்கூடாது என்ற நிறத்திமிர் பிடித்த ஆணை வெளியிட்டவரும் அவரே. இத்தகைய கொடுன்ச் செயல்களால் கோபம் கொண்ட வாஞ்சி அவரை சுட்டுக் கொன்றார் என்று சொல்லபடுகிறது.

அதே வேளையில் வாஞ்சி எழுதிய இறுதி மடல், அவர் ஏற்றுக் கொண்ட கொள்கை, ஆசு ஒரு முறை தாழ்த்தப்பட்ட மகப்பேறு பெண்ணை தன் வண்டியில் ஏற்றி பார்ப்பன சேரி (அக்கிரகாரம்) வழியாகக் கொண்டு சென்றதனால் சனாதன தர்மம் நசுக்கப்பட்டது என்ற அவரது பார்ப்பனர் சிந்தனை ஆகியவற்றின் பின்னணியோடு பார்க்கையில் வாஞ்சி, நாட்டுபற்றை விட சனாதன வெறியையும், ஆங்கில வல்லாதிக்க எதிர்ப்பு என்பதைவிட மனுதருமப் பாதுகாப்பு என்பதையுமே அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டார் என்றே என்னத தோன்றுகிறது.

No comments: